சென்னை: தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நமது அரசின் அமெரிக்க பயணம் வெற்றிகரமாக நிறைவேறியிருக்கிறது. இந்த பயணத்தில் 7,616 கோடி ரூபாய் புதிய முதலீடாக ஈர்க்கப்பட்டு, 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று உலகப் புகழ்பெற்ற போர்டு நிறுவனம் தனது உற்பத்தி ஆலையை மீண்டும் துவங்கப்போவதாக அறிவித்துள்ளது.
இன்னும் கூடுதலான முதலீடும், அதிகம் பேருக்கான வேலைவாய்ப்புகளும் உறுதி செய்வதற்கான முதல் கட்டப்பணிகளை முடித்துவிட்டு வந்திருக்கிறார் முதல்வர். யார் யார் உறுதியாக பணியை துவக்குவார்கள் என்பதை பல வகையில் உறுதி செய்து, அதன்மூலம் தமிழ்நாட்டுக்கு பரவலாக்கப்பட்ட வளர்ச்சி உறுதி செய்யப்படுமா என்பதையும் கவனத்தில் கொண்டுதான் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. முதலீடாக மாறும் உறுதித்தன்மை கொண்ட நிறுவனங்களுடன் மட்டுமே ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. சான்பிரான்சிஸ்கோவிலும், சிகாகோவிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாட்டில் 100 சதவீதம் முதலீடாக மாறி, மாநிலத்தில் பரவலான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவது நிச்சயம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது முதலீடாக மாறும் உறுதித்தன்மை கொண்ட நிறுவனங்களுடன் மட்டுமே ஒப்பந்தங்கள்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் appeared first on Dinakaran.