×

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் விறுவிறு

 

ராமநாதபுரம், செப். 14: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 யூனியன்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான சாதாரண தேர்தல் கடந்த 2019ம் ஆண்டு டிச.27 மற்றும் 30ம் தேதி நடத்தப்பட்டது. 2019ல் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவிக் காலம் வருகின்ற டிசம்பருக்குள் முடிவடைய உள்ளது. இதனை போன்று புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்வான மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2026ல் நிறைவடைகிறது.

இதனால் தமிழகத்திலுள்ள 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் மட்டும் டிசம்பர்க்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை துவக்கியுள்ளது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் 429 பஞ்சாயத்து தலைவர்கள், 3,075 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 11 ஊராட்சி ஒன்றியங்களில் 170 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், 17 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் என 3,691 பதவிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவின்பேரில் ராமநாதபுரம்,

கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், பரமக்குடி, நயினார்கோயில், போகலூர், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடனை, மண்டபம் மற்றும் திருப்புல்லாணி ஆகிய 11 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பாதுகாப்பு அறையிலுள்ள ஓட்டு பெட்டிகளை சரிபார்த்து சுத்தம் செய்தல், ஊரக பகுதிகளில் உள்ள வாக்கு பதிவு மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மற்றும் அதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்தல் உள்ளிட்ட தேர்தல் முன் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனால் வரும் நாட்களில் கிராம பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் விறுவிறு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram district ,Ramanathapuram ,Tamil Nadu ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டத்தில் கை கொடுத்த...