×
Saravana Stores

75வது ஆண்டு வரலாற்று பெருவிழாவான பவள விழாவில் படையென திரண்டு கொண்டாடி மகிழ்வோம்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னை: திமுகவின் 75வது ஆண்டுகால வரலாற்று பெருவிழாவான பவளவிழாவில் படையென திரண்டு கொண்டாடி மகிழ்வோம் என தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்: இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநில கட்சி, முக்கால் நூற்றாண்டு காலத்தை கடந்து, மக்களின் பேராதரவுடன் ஆட்சி பொறுப்பில் இருப்பதுடன், இந்திய அளவில் கொள்கை வலிமைமிக்க தாக்கங்களை ஏற்படுத்த கூடிய இயக்கமாகவும் திகழ்கிறதென்றால், அது திமுகதான். அதன்படி செப்.15ம் தேதி மாபெரும் இயக்கத்தை உருவாக்கி தந்து, மாநிலத்தின் உரிமைகளை காத்து, தமிழ்நாடு என்று மாநிலத்திற்கு பெயர் சூட்டிய அண்ணாவின் பிறந்தநாள், செப்.17ம் தேதி பெரியார் பிறந்தநாள், அதே நாள்தான் திமுக என்கிற பேரியக்கம் தொடங்கப்பட்ட நாள், இந்த மூன்றையும் இணைத்து, முப்பெரும் விழா என்று பெயர்சூட்டி திராவிட திருவிழாவாக கொண்டாடும் வழக்கத்தை உருவாக்கியவர் கலைஞர்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நாளை நடைபெற உள்ள பவளவிழா நிகழ்வுகள் குறித்தும், மாவட்டங்கள்தோறும் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் குறித்தும் அமெரிக்காவில் இருந்தபடியே, கழகத்தின் ஒருங்கிணைப்புக் குழுவினருடன் காணொலியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதுடன், மாவட்ட செயலாளர்கள் பலரிடமும் தொடர்ந்து பேசி வருகிறேன். செப்டம்பர் 17ம் தேதியன்று அதனை மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடும் பொறுப்பினை சென்னை தெற்கு மாவட்டத்திற்கு வழங்கியிருக்கிறது தலைமைக் கழகம். இதில், அமைச்சர் மா. சுப்பிரமணியன், பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

1957ல் தி.மு.க முதன்முதலாக பொது தேர்தல் களத்தை சந்தித்தபோது வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் உள்ள தூதரகங்களில் தமிழ் தெரிந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும், அந்தந்த நாடுகளில் உள்ள தமிழ்த் தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இன்றும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் உலக நாடெங்கும் வாழ்கிறார்கள். உடலுழைப்புத் தொழிலாளர்களாக மட்டுமல்ல, உயர்கல்வி கற்று, அதனால் அயல்நாடுகளில் உயர்பொறுப்புகளைப் பெற்றவர்களாக, நல்ல ஊதியம் பெறக்கூடியவர்களாகத் திகழ்கிறார்கள். அயல்நாடுகளில் பணியாற்றும் தமிழர்களின் நலன் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் அயலக நலத் துறை உருவாக்கப்பட்டதும் தி.மு.க ஆட்சியில்தான். அயலகத் தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டதும் திராவிட மாடல் ஆட்சியில்தான்.

இதுமட்டுமின்றி, அனைத்து துறைகளிலும் முன்னேறிய மாநிலமாகத் தமிழ்நாடு – அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழர்களின் நலன் காக்கும் வாரியம் என உலகத்தில் தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் நம்பிக்கைக்குரிய இயக்கமாக – அவர்களின் நண்பனாகத் தோழனாகத் திகழ்கிற இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். இதுதான் 75 ஆண்டுகாலப் பயணத்தின் சாதனை. இந்த வெற்றிப் பயணம் தொடர்ந்திட, செப்.17ம் தேதி வரலாற்று பெருவிழாவான கழகத்தின் பவள விழாவில் படையென திரண்டு, கொண்டாடி மகிழ்வோம். இது உங்களில் ஒருவனான என்னுடைய அழைப்பு மட்டுமல்ல; இந்த இயக்கத்தை உருவாக்கிய அண்ணாவும், கலைஞரும் நம்மை அழைக்கிறார்கள். அணி திரள்வோம். பணி தொடர்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* வரலாற்று திருப்பங்கள் கொண்ட ஒய்.எம்.சி.ஏ. திடல்
திமுகவின் பவள விழா நிகழ்வுகள் நடைபெறும் சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடல் வரலாற்று திருப்பங்கள் கொண்ட பல்வேறு சிறப்புகளை உடையது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சென்னை தெற்கு மாவட்டத்தின் சார்பில் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடத்தப்பட்ட கழக விழாக்கள் அனைத்தும் வரலாற்று திருப்பங்களாக அமைந்திருக்கின்றன. வங்கக் கடல் மணல்பரப்பில் தன் அண்ணன் அருகே ஓய்வெடுக்கச் சென்ற கலைஞருக்கு அகில இந்திய தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற்றது நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில்தான். முரசொலியின் பவள விழா பொதுக்கூட்டம் கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் நடைபெற்றது. நம் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற அந்த கூட்டம்தான் தமிழ்நாட்டில் இன்றளவும் வலிமையாக உள்ள கூட்டணிக்கு கால்கோள் விழாவாக அமைந்தது. அது, கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் களத்தில் மகத்தான வெற்றியை பெற்றது.

அதன் நன்றி அறிவிப்பு கூட்டம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில்தான் நடைபெற்றது. இதுதவிர, அதே நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் சென்னை தெற்கு மாவட்டத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட, உங்களில் ஒருவனான என்னுடைய 70வது பிறந்தநாளில் வடமாநில தலைவர்கள் வாழ்த்தி பேசிய விழாவில் தான், இன்றைய ‘இந்தியா’கூட்டணிக்கு அச்சாரமிடப்பட்டது. அதேபோல், கலைஞர் நூற்றாண்டையொட்டி மகளிரணி சார்பில், கனிமொழி எம்.பி., முன்னெடுப்பில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கருத்தரங்கத்தில் அன்னை சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு இயக்கங்களை சேர்ந்த பெண் தலைவர்கள் பங்கேற்று, கலைஞரின் மகளிர் நலன் காக்கும் திட்டங்களையும், மகளிர் உரிமை காப்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பையும் எடுத்துரைத்தார்கள். இப்படி பல சிறப்புகள் கொண்ட இடத்தில்தான் திமுகவின் பவள விழா பொதுக்கூட்டம் செப்டம்பர் 17ம் தேதி எழுச்சிகரமாக நடைபெறவிருக்கிறது என கூறியுள்ளார்.

The post 75வது ஆண்டு வரலாற்று பெருவிழாவான பவள விழாவில் படையென திரண்டு கொண்டாடி மகிழ்வோம்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Coral Festival ,Chief Minister ,M.K.Stal ,CHENNAI ,M.K.Stalin ,DMK ,Pawal ,Vizha ,M. K. Stalin ,
× RELATED திமுகவின் தொடர் வெற்றி தான் எதிர்...