×
Saravana Stores

தனியார் பள்ளிகளுக்கான கட்டிட அனுமதிக்கான விண்ணப்பங்களை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டிடம் மற்றும் கூடுதல் கட்டிட அனுமதி தொடர்பான விண்ணப்பங்கள் மீது உரிய பரிசீலனை செய்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய தனியார் பள்ளிகள் சங்க தலைவர் பி.டி.அரசகுமார் சார்பாக அதன் பொதுச் செயலாளர் பழனியப்பன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தின்படி 2011 ஜனவரி 1க்கு பிறகு பள்ளிகளின் கட்டிடங்கள் மட்டுமின்றி கூடுதலாக கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி பெற்றிருக்க வேண்டும். அதற்கான விண்ணப்பத்தை நகர்ப்புற திட்டமிடல் துறை இயக்குனரிடம் அளித்து அனுமதி பெற வேண்டும். இல்லாவிட்டால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இதற்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தும் அந்த விண்ணப்பம் தொடர்ந்து நிராகரிப்படுகிறது என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜயன் ஆஜராகி, பள்ளிகளில் கூடுதல் கட்டிட அனுமதியை பெற ஆன்லைனிலோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும். நேரில் விண்ணப்பங்கள் பெறப்படுவதில்லை. ஆன்லைனிலும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாமல் நிராகரிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், மனுதாரர் அளித்த விண்ணப்பத்தின் மீது 3 வாரத்தில் பரிசீலித்து உரிய முடிவெடுக்குமாறு அரசின் நகர்ப்புற திட்டமிடல் துறைக்கும், தனியார் பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

The post தனியார் பள்ளிகளுக்கான கட்டிட அனுமதிக்கான விண்ணப்பங்களை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : High Court ,Tamil Nadu ,CHENNAI ,Tamil Nadu government ,PT Arasakumar ,All India Private Schools Association ,Dinakaran ,
× RELATED வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படும்...