×
Saravana Stores

நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்கணும்

* முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அன்னபூர்ணா உணவக உரிமையாளர் ஜிஎஸ்டி வரி ஏழை மக்கள் பகுதியினரையும், உணவகம் போன்ற சிறு தொழில் செய்பவர்களையும் எப்படி பாதிக்கிறது என்பதை எளிய முறையில் எடுத்துக் கூறினார். இந்தப் பொது நிகழ்வு சமூக வலைதளங்களில் விரிவாக பரவி நாட்டின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் ஒன்றிய நிதியமைச்சர், அவரது ஆதரவாளர்கள், அதிகார வர்க்கத்தினர் அன்னபூர்ணா உணவக உரிமையாளரை தனியாக, நிதியமைச்சர் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். தவறான வரி விதிப்பை திருத்தியமைக்க முன் வராமல், முறையிட்டவரை தனியாக அழைத்து மன்னிப்பு கேட்க வைத்தது அதிகார ஆணவத்தின் உச்சமாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களையும் அவமானப்படுத்திய ஒன்றிய நிதியமைச்சர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* செல்வபெருந்தகை
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கூறுகையில், ‘அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், முறையற்ற ஜி.எஸ்.டி. வரிவிதிப்பினால் ஏற்படுகிற பாதிப்புகள் குறித்து தெளிவாக எடுத்துரைத்தார். அவர் நகைச்சுவையாக பேசியதால், அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது. இதைக் கண்டு ஆத்திரமடைந்த நிர்மலா சீதாராமன் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். இதனால் பாஜவினரின் பல்வேறு மிரட்டல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் ஆளான சீனிவாசன், பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் மூலமாக நிர்ப்பந்தப்படுத்தி ஒன்றிய நிதியமைச்சர் தங்கியிருந்த ஓட்டலுக்கு வரவழைக்கப்பட்டு மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார். இது அராஜகத்தின் உச்சம். மேலும் அதை வீடியோ எடுத்து வெளியிட்ட பாஜவின் செயல் அநாகரீகமானது. இவ்வாறு செய்த நிர்மலா சீதாராமன், ஓட்டல் உரிமையாளர் சீனிவாசனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நிர்மலா சீதாராமனின் ஆணவப் போக்கிற்கு தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இதை கண்டித்து கோவையில் இன்று போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.

* ஒன்றிய அரசும், அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும்: கனிமொழி எச்சரிக்கை
திமுக எம்.பி.கனிமொழி எம்பி தனது சமூகவலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது: ’பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து’- குறள் 978, அதிகாரம் 98. ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

* ‘பாசிச எண்ணம் கொண்டவர்களை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்’
எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: அன்னபூர்ணா உணவகக் குழும உரிமையாளர் சீனிவாசனை மன்னிப்பு கேட்கச் சொல்லி, அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஏற்பட்ட இழுக்காகும். இதுபோன்ற பாசிச எண்ணம் கொண்ட நடவடிக்கைகளை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இதற்காக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒட்டுமொத்த தமிழக மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டு மக்களையே கேவலப்படுத்தும் செயல்: அதிமுக
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: அதிகார மமதையில் ஆளும் பாசிச பாஜ அரசு. ஒன்றிய நிதி அமைச்சர் பங்குபெற்ற கூட்டத்தில் பேசிய அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் எந்தவிதத்திலும் தவறாக பேசவில்லை. தங்கள் தொழிலில் சந்திக்கும் சில பிரச்னைகளை கோரிக்கையாக முன் வைத்தார். அதற்காக அவரை அழைத்து மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருப்பது தமிழ்நாட்டு மக்களையே கேவலப்படுத்தும் செயல். அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருப்பது பாசிசத்தின் உச்சம். கோயம்புத்தூர் மக்கள் பாசத்தில் மட்டுமல்ல ரோசத்திலும் அதிகமானவர்கள் தான். இனி எந்த காலத்திலும் தமிழ்நாட்டிலும், கோவையிலும் மக்கள் பாஜவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த செயலால் இன்னுமொரு நூறாண்டு ஆனாலும் பாஜ இதற்காக வருந்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்கணும் appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,Mutharasan Communist Party of India ,State Secretary ,Mutharasan ,Annapurna ,Dinakaran ,
× RELATED ஆணாதிக்கம் தடையாக இருந்திருந்தால்...