கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மேல் கூடலூர் பகுதியில் வசிப்பவர் அருணா (36). இவரது கணவர் ரனீஸ் (35). இந்த நிலையில் கணவர் ரனீஸ் 2வது திருமணம் செய்து கொண்டு தன்னையும் குழந்தைகளையும் கவனிக்காமல் உதாசீனப்படுத்துவதாக கூறி நேற்று கணவர் வீட்டு முன் 2 பெண் குழந்தைகளுடன் அமர்ந்து அருணா தர்ணாவில் ஈடுபட்டார். இதுகுறித்து அருணா கூறுகையில், கேரள மாநிலம் மூணாறு இடுக்கியில் பிறந்த எனக்கு கடந்த 2010ம் ஆண்டு திருப்பூரில் ரனீசுடன் திருமணம் நடைபெற்றது. ரனீஸ் வீடு மேல் கூடலூர் கருணாநிதி நகர் காலனியில் உள்ளது. ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுடன் கணவரை விட்டு பிரிந்து வசித்து வந்த என்னை ரனீஸ் 2வது திருமணம் செய்து கொண்டார்.
எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். திருப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கூடலூரில் உள்ள வீட்டை சீரமைப்பதற்காக தன்னை தாய் அழைப்பதாக கூறி ரனீஸ் கூடலூர் வந்தார். அங்கு மணிகண்டன் என்ற பெயரில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த தகவல் அறிந்ததும் நான் திருப்பூரில் இருந்து கூடலூர் வந்து மேல் கூடலூர் ஓவிஎச் சாலையில் தனியாக வீடு எடுத்து 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். கூலி வேலை செய்து குழந்தைகளை படிக்க வைத்து வருகிறேன். இந்த நிலையில், எனது கணவர் 2வது திருமணம் செய்து கொண்டு எனது குடும்பத்தை கவனிக்காமல் உதாசீனப்படுத்தியதால் இது குறித்து மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்பி மற்றும் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.
ஆனால் இதுவரை மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் எனது குழந்தைகளுக்கு ஆதார் எடுக்க வேண்டும் என்பதால் அதற்கும் அவர் உதவவில்லை. அவவப்போது வீட்டுக்கு வந்து செல்வார். இந்த நிலையில், நான் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் என்னை அவர் அடிக்கடி மிரட்டி வந்தார். நேற்று காலை 2வது மனைவியுடன் டூவீலரில் வந்து எனது வீடு முன் நிறுத்தினார். நான் வெளியே வந்ததும் 2வது மனைவியுடன் டூவீலரை ஓட்டி சென்றார். இதனை அடுத்து இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கணவர் வீடு முன் பெண் குழந்தைகளுடன் குழந்தைகளுடன் நியாயம் கேட்டு தர்ணாவில் ஈடுபட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
தகவலறிந்து அங்கு வந்த கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் என்னை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். கணவர் ரனீசையும் அழைத்து விசாரித்தனர். ஒரு வாரத்தில் குழந்தைகளுக்கு ஆதார் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்பத்திற்கு தேவையான பண உதவி செய்ய வேண்டும். தவறினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
The post 2வது திருமணம் செய்து உதாசீனம்: கணவர் வீடு முன் குழந்தைகளுடன் மனைவி தர்ணா appeared first on Dinakaran.