×
Saravana Stores

கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமான பணிகள் ஜனவரிக்குள் நிறைவடையும்: தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்

சென்னை: கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் நிறைவடையும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டது. இப்பிரச்னைக்கு தீர்வாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை சென்னைக்கு வெளியில் இருந்து இயக்க அரசு முடிவு செய்தது. இதையடுத்து, வண்டலூர் ஜிஎஸ்டி சாலையோரம் உள்ள கிளாம்பாக்கத்தில் பிரமாண்ட பேருந்து நிலையம் கட்டப்பட்டு, கடந்த டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வந்தது.

இங்கிருந்து, தற்போது தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல், சென்னையில் இருந்து இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பயணிகள் சென்று வர வசதியாக பல்வேறு பகுதிகளில் இருந்து மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல், தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் உள்ள மின்சார ரயில் சேவையை கிளாம்பாக்கம் வரும் பயணிகள் பயன்படுத்தும் வகையில், கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என பயணிகளிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.

அதன்பேரில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணியை, தமிழக அரசின் நிதியுதவியுடன் தெற்கு ரயில்வே தொடங்கியது. இதற்காக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மூலம் 20 கோடியை வழங்கியது. மேலும், சாலையின் எதிர்புறத்தில் அமைந்துள்ள ரயில் நிலையத்தை பேருந்து நிலையத்துடன் இணைக்க, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பாக ₹79 கோடி செலவில் ஸ்கைவாக் எனப்படும் ஆகாய நடைபாதை அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில், கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமான பணிகள் வரும் ஜனவரி மாதத்திற்குள் முடிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: நிலம் கையகப்படுத்தியதில் நிலவிய சிக்கல் காரணமாக, ரயில் நிலைய கட்டுமான பணி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன் அது சரி செய்யப்பட்டது. ரயில் நிலையத்திற்கு சுற்றுச்சுவர், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, பிளாட்பாரங்களில் மண் நிரப்பும் பணி தொடங்கியுள்ளது. வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் இடையே வரும் இந்த ரயில் நிலையம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை விரைவாகவும் எளிதாகவும் அணுகும் வகையில் ஸ்கைவாக்குடன் கட்டப்பட்டு வருகிறது.

முதலில் இந்த வருடம் டிசம்பருக்குள் கட்டுமானத்தை முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் பணிகள் மேற்கொள்ளும் வேகத்தை பார்க்கும் போது கண்டிப்பாக அடுத்த ஆண்டு ஜனவரியில் கட்டுமானம் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ரயில் நிலையத்தில் மொத்தம் 2 நடைமேடை இருக்கும். ஒன்றில் எக்ஸ்பிரஸ் ரயில்களும், மற்றொன்றில் புறநகர் ரயில்களும் நிற்கும். இதன் மூலம் இந்த ரயில்வே நிலையம் மல்டி மாடல் ரயில் நிலையமாக மாற்றம் அடையும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

* ஆகாய நடைமேம்பாலம்

ஆகாய நடைமேம்பாலம் அமைப்பது குறித்து சிஎம்டிஏ அதிகாரிகள் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சில நாட்களுக்கு முன்பு இங்கே ஆகாய நடைமேம்பாலம் அமைப்பதற்கு கொள்கை ரீதியான தொழில்நுட்ப ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் அடித்தளம் அமைக்கும் பணி ஜிஎஸ்டி சாலையில் தொடங்க உள்ளது. தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை அமைக்கப்பட உள்ள பாலத்திற்கு இந்த நடைமேம்பாலம் இடையூறாக இருக்க கூடாது என்பதால் இதற்கான தொழில்நுட்ப அனுமதி வாங்க விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.

அங்கே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. இதனால் இனி அங்கே பேருந்துகளுக்கு இடையே கிராஸ் செய்ய நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்தின் மையப்பகுதிக்கு 400 மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமான பணிகள் ஜனவரிக்குள் நிறைவடையும்: தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Glampakkam railway station ,Southern Railway ,Chennai ,Klampakkam railway station ,Coimbed Bus Station ,Dinakaran ,
× RELATED பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை –...