- கிருஷ்ணகிரி
- கிருஷ்ணகிரி மாவட்டம்
- கலெக்டர்
- அலுவலகம்
- மண்டபம்
- பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் திணைக்களம்
*கலெக்டர் தகவல்
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும், கொசு ஒழிப்பு பணிகளுக்காக 546 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என கலெக்டர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக, டெங்கு காய்ச்சல் தடுப்பு தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்து கலெக்டர் சரயு பேசியதாவது:
டெங்கு நோய் ஏடிஸ் கொசுவினால் பரவுகிறது. ஏடிஸ் கொசுக்கள் சுத்தமான தண்ணீர் தேங்கும் பகுதிகளில் உற்பத்தியாகிறது. மழைக்கு பிறகு பிளாஸ்டிக் கப்புகள், காகித கோப்பைகள், பிஸ்கெட் கவர்கள், தார்பாய் தாள்கள், உடைந்த பானைகள் மற்றும் கொள்கலன்கள், தேங்காய் ஓடுகள், டயர்கள், உடைந்த பொம்மைகள், மேற்கூரைகள் போன்றவற்றில் தற்காலிகமாக மழைநீர் தேங்கும். இப்பகுதிகள் ஏடிஸ் கொசுகளின் இனப்பெருக்க புள்ளியாக செயல்படுகிறது. இங்கு சேமிக்கப்படும் தண்ணீரில் கொசு முட்டையிட்டு, லார்வாவாக வளர்ந்து, பின்னர் கொசுவாக உற்பத்தியாகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பொது சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதார ஆய்வாளர்கள், லார்வா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் லார்வாக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கின்றனர். பொதுமக்கள் தங்கள் வீட்டை சுற்றி லார்வா வளருவதற்கான இனப்பெருக்க புள்ளிகள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மாவட்ட சுகாதார அலுவலர் தலைமையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து காய்ச்சல் நோயாளிகளையும் கண்காணித்து, தரவுகளுடன் அதிக பாதிப்புகள் உள்ள பகுதிகளில் டெங்கு மற்றும் காய்ச்சல் பாதிப்பு உள்ள இடங்களின் அடிப்படையில், நடமாடும் மருத்துவக்குழுவினர் மற்றும் விரைவு நடவடிக்கை குழுக்கள் மூலம் ஒவ்வொரு பகுதிகளிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன.
கிருஷ்ணகிரி நகராட்சியிலும், ஓசூர் மாநகராட்சியிலும் இதே நடைமுறை தான் கடைபிடிக்கப்படுகிறது. மேலும், டெங்கு பாதித்தால் காய்ச்சல், கண் பின்புறம் வலி, உடல் வலி ஆகிய அறிகுறிகள் தெரியும். இந்நோய்க்கு அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் ரத்தப் பரிசோதனை மற்றும் சிகிச்சை வசதிகள் உள்ளன.
பொதுமக்களுக்கு காய்ச்சல் ஏற்படும் போது காய்ச்சல் முகாம்களில் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும், டெங்கு அறிகுறிகள் ஏதேனும் இருப்பின் அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பதிவு செய்யப்பட்ட மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். டெங்கு பாதிப்பை உரிய நேரத்தில் கண்டறிய தவறினால், கடுமையான சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
மேலும், கொசு ஒழிப்பு பணிகளுக்காக அனைத்து நகர, கிராம பகுதிகளில் களப்பணிகளை மேற்கொள்ள 546 தற்காலிக பணியாளர், மாவட்டத்தில் பணியமர்த்தி கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் சுமார் 837 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, அதில் 30 ஆயிரத்து 808 பொதுமக்கள் சிகிச்சை பெற்று பலன் அடைந்துள்ளனர். டெங்கு ஒழிப்புணர் சுகாதார ஆய்வாளர்கள் மூலமாக 1,748 விளம்பர அறிக்கை தாள்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
மேற்காணும் வழிகாட்டு நடைமுறைகளை அனைத்து பொதுமக்களும், அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், தொழிற்சாலைகளில் கள ஆய்வு பணிகள் மற்றும் ஒவ்வொரு சனிக்கிழமையும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் பேசினார். இந்த கூட்டத்தில், மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் ரமேஷ்குமார், மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post மாவட்டம் முழுவதும் கொசு ஒழிப்பு பணிக்காக தற்காலிக பணியாளர்கள் 456 பேர் நியமனம் appeared first on Dinakaran.