*பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
சிதம்பரம் : சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் விழுப்புரம்- நாகை நான்கு வழிச்சாலை பணிகள் முடிந்து போக்குவரத்து துவங்கியுள்ளது.
அதேபோல் சிதம்பரம்- திருச்சி புறவழிச்சாலை பணிகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்விரு சாலைகளும் சந்திக்கும் பொய்யா பிள்ளைசாவடி புறவழிச்சாலையில் விழுப்புரம்- நாகை நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்காக மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சிதம்பரம்- திருச்சி சாலை வழியாக காட்டுமன்னார்கோவில், குமராட்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருபுறத்திலும் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடை சிறிய அளவில் இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு சரிவர தெரிவதில்லை. மேலும், அப்பகுதியில் கால்நடைகள் கூட்டமாக சுற்றித் திரிகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரிக்கு மாணவ மாணவிகளை அழைத்து செல்லும் வாகனங்கள், அலுவலகப் பணிக்கு செல்பவர்கள் டூவீலர், ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும்போது சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்துகள் ஏற்படுகிறது.
இரவு நேரங்களில் இந்த சாலையில் போதிய மின்விளக்குகள் இல்லாததாலும், வேகத்தடைகள் சிறிய அளவில் இருப்பதாலும் வாகன ஓட்டிகளுக்கு சரிவர தெரிவதில்லை. இதனால் இருசக்கர வாகனங்களில் வருவோர், வேகத்தடையின் மீது வேகமாக ஏறி கீழே விழுகின்றனர். சிலர் வேகத்தை குறைக்காமல் அப்படியே செல்கின்றனர்.எனவே, பெய்யாபிள்ளை சாவடி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும், வேகத்தடையை பெரிதாக அமைக்க வேண்டும், போதிய அளவில் மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Dinakaran.