×
Saravana Stores

நிதி இழப்பு தொடர்பான சைபர் குற்றங்களின் விசாரணை அதிகாரிகளுக்கு ஒரு வழிமுறை: போலீஸ் கமிஷனர் அருண் வெளியிட்டார்

சென்னை: நிதி இழப்பு தொடர்பான சைபர் குற்றங்களுக்கு தீர்வாக, நிதி இழப்பு தொடர்பான சைபர் குற்றங்களின் விசாரணை அதிகாரிகளுக்கு ஒரு வழிமுறையை சென்னை காவல் ஆணையர் அருண் நேற்று வெளியிட்டார். சென்னையில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை மொத்தம் 1679 வழக்குகள் சைபர் குற்றங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 1589 வழக்குகள் நிதி இழப்பு தொடர்பான சைபர் குற்றங்கள். இவற்றில் பல்வேறு மோசடிகளில் சுமார் ரூ.189 கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அவை ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடி, ஸ்கைப் மோசடிகள், ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடி திருமண மோசடி, மின்சார கட்டணம் செலுத்துதலில் மோசடி, பரிசு மோசடி போன்றவை அடங்கும். அதிகரித்து வரும் நிதி இழப்பு தொடர்பான சைபர் குற்றங்களுக்கு தீர்வாக, நிதி இழப்பு தொடர்பான சைபர் குற்றங்களின் விசாரணை அதிகாரிகளுக்கு ஒரு வழிமுறையை சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் நேற்று வெளியிட்டார்.

அதன்படி, எந்தவொரு நிதி இழப்பு தொடர்பான சைபர் குற்றத்தில் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும், முதலில் தேசிய சைபர் குற்றங்களை புகாரளிக்கும் தளமான என்சிஆர்பி மூலம் குற்றத்தை பதிவு செய்ய வேண்டும். இதற்கு சைபர் க்ரைம் ஹெல்ப்லைன் எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம். என்சிஆர்பி பதிவு செய்யப்பட்டு கிடைக்கும் பதிவு எண் வாயிலாக குற்றத்தில் ஈடுபட்ட சந்தேகத்திற்கிடமான வங்கி கணக்குகளை முடக்கம் செய்யும் செயல்முறையை தொடங்குகிறது.

எனவே, ஒரு சைபர் குற்றத்தில் பாதிக்கப்பட்டவர் என்சிஆர்பியில் பதிவு செய்வது கட்டாயம். சென்னை உயர் நீதிமன்றம் நீதிமன்ற சுற்றறிக்கையில், சைபர் குற்றங்களில் இழந்த பணத்தை மீட்டெடுக்க எப்ஐஆர் இன்றி என்சிஆர்பி பதிவின் அடிப்படையில் மற்றும் சைபர் குற்ற போலீசார் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் பணத்தை மீட்கும் வழிமுறையை தெரிவித்துள்ளனர். நிதி இழப்பு சைபர் குற்றங்களில் பணத்தை இழந்தவர்கள் என்சிஆர்பி பதிவு செய்து, பிறகு தங்கள் எல்லைக்கு உட்பட்ட சைபர் குற்ற போலீஸ் நிலையத்தை அணுகி, சந்தேகத்திற்கிடமான முடக்கப்பட்ட வங்கி கணக்குகளில் தங்களது பணம் முடக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம்.

என்சிஆர்பி பதிவு எண் மற்றும் சைபர் போலீசாரின் அறிக்கையின் அடிப்படையில் குற்றவாளியின் வங்கிக் கணக்குகளில் முடக்கப்பட்ட தொகைகளை பெறுவதற்காக தங்கள் எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தில் சட்ட பிரிவின்படி மனு தாக்கல் செய்யலாம். பொதுமக்கள் இந்த வகையான அதிக லாபம் தரும் முதலீட்டு விளம்பரங்கள், போலியான முதலீட்டு செயலிகள், வலைதளங்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அறியாத வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்த வேண்டாம், சைபர் குற்றங்களுக்கான ஹெல்ப்லைன் எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தி உள்ளார்.

The post நிதி இழப்பு தொடர்பான சைபர் குற்றங்களின் விசாரணை அதிகாரிகளுக்கு ஒரு வழிமுறை: போலீஸ் கமிஷனர் அருண் வெளியிட்டார் appeared first on Dinakaran.

Tags : Arun ,CHENNAI ,Police Commissioner ,Dinakaran ,
× RELATED டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க...