சென்னை: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று விறுவிறுப்பாக தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே ரயில் டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்ததால் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் கொண்டாட்டம் வருகிற 2025 ஜனவரி 13ஆம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 13ஆம் தேதி போகி பண்டிகை, 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 15ஆம் தேதி மாட்டுப் பொங்கல், 16ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இதற்காக லட்சக்கணக்கான மக்கள், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்புவதற்காக ரயில் பயணத்தை மேற்கொள்வர். இதற்காக 120 நாட்களுக்கு முன்பே, ரயிலில் முன்பதிவு செய்ய வசதி உள்ளது. இதனால் 120 நாட்களுக்கு முன்னதாக நேற்று ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. நேற்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியதும், ரயில் நிலையங்களின் முன்பதிவு மையங்களில் முன்னதாக வந்து காத்திருந்த ஏராளமான பயணிகள், வரிசையில் நின்று, முன்பதிவு செய்து கொண்டனர்.
பெரும்பாலானவர்கள் IRCTC எனப்படும் ரயில்வே இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவை மேற்கொண்டனர். இதனால் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்கள் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. ஆன்லைன் வாயிலாக பெரும்பாலான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதால் நேரில் முன்பதிவு செய்வதற்காக ரயில்நிலைய கவுன்டர்களில் காத்திருந்த மக்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.
ரயில்களில் ஜனவரி 10 ஆம் தேதி பயணம் செய்வதற்கு நேற்று (செப்டம்பர் 12) நேற்று முன்பதிவு செய்யப்பட்டது. அதேபோல் ஜனவரி 11 ஆம் தேதி பயணம் செய்ய இன்றும் (செப்டம்பர் 13ம் தேதி), ஜனவரி 12 ஆம் தேதி பயணத்துக்கு வரும் 14ஆம் தேதியும், ஜனவரி 13 ஆம் தேதி போகி பண்டிகை அன்று பயணம் செய்ய வரும் 15 ஆம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என தெற்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள டிக்கெட் முன்பதிவு செய்யும் அலுவலகத்தில் நேற்று கணினி கோளாறு ஏற்பட்ட காரணத்தினால் காலை 6 மணி முதலாக காத்திருந்த பொது மக்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. பெரும்பாலான டிக்கெட்டுகள் ஆன்லைன் வாயிலாகவே பதிவு செய்யப்பட்டதால் நேரில் வருகை தந்தவர்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் டிக்கெட்கள் உடனுக்குடன் விற்றுத் தீர்ந்து விடுகின்றன.
இதற்காக முன்பதிவு மையங்களில் கூட்டமும் நிரம்பி வழிகின்றன. எனவே பண்டிகை காலங்களில் முன்பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்து தரும்படியும், கூடுதலாக ரயில்களை இயக்க வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்காக கூடுதல் டிக்கெட் கவுன்டர்களை அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மிகுந்த வருத்தத்துடனும் வேதனையுடனும் தெரிவித்தனர்.
The post பொங்கல் பண்டிகை முன்பதிவு தொடக்கம் சில நிமிடங்களில் ரயில் டிக்கெட்டுகள் காலி: கவுன்டர்களில் வரிசையில் நின்றவர்கள் ஏமாற்றம் appeared first on Dinakaran.