×
Saravana Stores

மதுரையில் அதிகாலை பயங்கரம் பெண்கள் விடுதியில் பிரிட்ஜ் வெடித்து 2 ஆசிரியைகள் பலி: மூன்று பேர் படுகாயம்; உரிமையாளர், வார்டன் கைது

மதுரை: மதுரையில் பெண்கள் தங்கும் விடுதியில் பிரிட்ஜ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் இரு ஆசிரியைகள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். வார்டன் உள்ளிட்ட 3 பேர் படுகாயத்துடன் தீவிர சிகிச்சையில் உள்ளனர். சம்பவம் தொடர்பாக விடுதி உரிமையாளர், வார்டனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை, பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. இதன் எதிரே கட்ராபாளையம் தெரு உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான விசாகா பெண்கள் தங்கும் விடுதி கடந்த 30 ஆண்டுகளாக செயல்படுகிறது.

இதில் 45க்கும் அதிக பெண்கள் தங்கி பணிபுரிந்தும், படித்தும் வருகின்றனர். நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென்று விடுதியில் தீப்பற்றி கரும்புகை கிளம்பியது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பெண்கள் திடீரென ஏற்பட்ட புகைமூட்டத்தில் சிக்கி தவித்து கூச்சலிட்டுள்ளனர்.புகை மூட்டத்தில் இருந்து தப்பி வெளியேறுவதற்கான அவசர வழி இல்லாத நிலையில் கடும் நெருக்கடி மிகுந்த படிக்கட்டுகளில் சிரமத்துடன் தப்பியுள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

விடுதியில் இருந்த பிரிட்ஜ் வெடித்து அதில் உள்ள சிலிண்டரிலிருந்து வெளியேறிய நச்சுப் புகையால் இந்த விபத்து நடந்திருப்பது தெரிந்தது. விடுதிக்குள் இருந்து 5 பேர் படுகாயங்களுடன், மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது வழியிலேயே தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா குரங்கணி சன்னதி தெரு சிங்கத்துரை மனைவி பரிமளா (55), எட்டயபுரம் தாலுகா சிங்கிலிப்பட்டி பாலகிருஷ்ணன் மனைவி சரண்யா (27) ஆகிய 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

உயிரிழந்த பரிமளா மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே இரும்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். சரண்யா, எட்டயபுரம் பேரிலோவன்பட்டியை சேர்ந்த தனியார் டெக்னிகல் இன்ஸ்டியூட்டில் ஆசிரியை பணியில் இருந்து வந்தார். தீ விபத்து நடந்தது தெரிந்ததும் தனது அறையில் படுத்திருந்த பல பெண்களை எழுப்பி தப்பிச் செல்லும்படி கத்தி வெளியேற்றிவிட்டு, முடிவில் கரும்புகையில் மூச்சு திணறி பரிமளா இறந்தது தெரிய வந்துள்ளது.

மயங்கிய நிலையில் மீட்கப்பட்டவர்களில், பழங்காநத்தத்தை சேர்ந்த வார்டன் புஷ்பா (58), மேலூரைச் சேர்ந்த நர்சிங் முதலாண்டு மாணவி ஜனனி (17) மற்றும் சமையலர் கனி (62) ஆகிய 3 பேர், உயிருக்கு ஆபத்தான நிலையில் எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். தகவலறிந்த அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், விபத்து நடைபெற்ற விடுதி மற்றும் மீட்கப்பட்ட பெண்கள் தங்க வைக்கப்பட்ட மண்டபம் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஆகியோரை சந்தித்து விசாரணை நடத்தியதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இந்த தீ விபத்தில் விடுதியில் தங்கியிருந்த ஏராளமான பெண்கள் மற்றும் மாணவிகளின் கல்வி சான்றிதழ்கள் மற்றும் ஏராளமான அசல் ஆவணங்களும், செல்போன்கள் மற்றும் உடைகள், உபகரணங்கள் என அனைத்தும் முழுவதுமாக தீயில் கருகின. இதனால் மாற்று உடை கூட இல்லாத நிலையில் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட 26 பெண்கள் மதுரை மேலமாரட் வீதி பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உடைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டதோடு, சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனை மற்றும் மனரீதியான உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தீ விபத்து ஏற்பட்டதும் வார்டன் புஷ்பா துரிதமாக செயல்பட்டதால் பல பெண்கள் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து திடீர் நகர் காவல்துறையினர், வருவாய்த்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து, விடுதியின் உரிமையாளரான டிவிஎஸ் நகரை சேர்ந்த இன்பா ஜெகதீஷ், வார்டன் புஷ்பா ஆகியோரை கைது செய்தனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருந்ததால் மாநகராட்சி சார்பில் 2 ஆண்டுகளுக்கு முன்பே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் காலி செய்யவில்லை. தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால் மாநகராட்சி இறுதி நோட்டீஸ் வழங்கி ஒரு சில நாட்களில் இடித்துத் தள்ள இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மதுரையில் அதிகாலை பயங்கரம் பெண்கள் விடுதியில் பிரிட்ஜ் வெடித்து 2 ஆசிரியைகள் பலி: மூன்று பேர் படுகாயம்; உரிமையாளர், வார்டன் கைது appeared first on Dinakaran.

Tags : Payangaram girls hostel bridge explosion ,Madurai ,Dinakaran ,
× RELATED மதுரை அரசு மருத்துவமனை கட்டிடங்களின்...