×
Saravana Stores

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க ஆய்வு: அமைச்சர் சக்கரபாணி தகவல்

சென்னை: அண்ணா நகரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நவீன மயமாக்கப்பட்ட அமுதம் மக்கள் அங்காடி மற்றும் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள 2 அமுதம் நியாய விலைக்கடை கட்டிடங்களை அமைச்சர் சக்கரபாணி நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், தயாநிதி மாறன் எம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர். பிறகு அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது: மானிய கோரிக்கையில் 100 அமுதம் அங்காடி தொடங்குவோம் என்றோம். அதன்படி, அண்ணாநகரில் புதிய மேம்படுத்தப்பட்ட அங்காடியை திறந்துள்ளோம். ஏற்கனவே கோபாலபுரத்தில் வைக்கப்பட்ட அமுதம் அங்காடியில் சிறப்பான முறையில் செயல்படுகிறது. விரைவில் கொளத்தூரிலும் காஞ்சிபுரத்திலும் அமுதம் அங்காடிகளை திறக்க உள்ளோம். அமுதம் அங்காடியில் இருந்து வீடு வீடாகப் பொருட்களை கொண்டு செல்ல வேண்டும் என்று தயாநிதி மாறன் எம்பி கோரிக்கை வைத்துள்ளார்.

அதை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்போம். ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினரால் வைக்கப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்தான ஆய்வு நடந்து வருகிறது. மற்ற கடைகளை ஒப்பிடும்போது அமுதம் அங்காடியில் விலை குறைவாக இருக்கும். லாப நோக்கமின்றி விலைவாசியை கட்டுப்படுத்த அமுதம் அங்காடிகள் திறக்கப்பட்டுள்ளன. 100 அங்காடிகள் என்பதோடு இல்லாமல் மக்களின் வரவேற்பை பொறுத்து மேலும் கடைகள் திறக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 3 லட்சம் பேர் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்துள்ளனர். அதில் 1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு குடும்ப அட்டை தயாராக உள்ளது. மீதமுள்ளவர்களுக்கு பரிசீலித்து குடும்ப அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

The post ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க ஆய்வு: அமைச்சர் சக்கரபாணி தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Chakrapani ,Chennai ,Amutham People's Store ,Anna Nagar ,Tamil Nadu Consumer Goods Trade Association ,Amutham ,Annanagar ,Dinakaran ,
× RELATED கட்சிக்கு துரோகம் செய்வோரை ஒருபோதும்...