×
Saravana Stores

மாணவர்களை உள்ளே அழைத்து கொண்டு விட, அழைத்து வர அனுமதி மறுப்பு: சென்னை ஐஐடி நுழைவாயில் முன் பெற்றோர் முற்றுகை போராட்டம்

வேளச்சேரி: மாணவர்களை உள்ளே அழைத்து கொண்டு விடவும், அழைத்து வரவும் அனுமதிக்க கோரி சென்னை ஐஐடி நுழைவாயில் முன் பெற்றோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை ஐஐடி வளாகத்தில் வனவாணி அறக்கட்டளை பள்ளி மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 1 முதல் 12ம் வகுப்பு வரை இயங்கி வருகிறது. தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், இந்த பள்ளிகளில் படித்து வருகின்றனர். ஐஐடி வளாகத்தில் இந்த பள்ளிகள் இயங்கி வருவதால் நுழைவாயிலில் இருந்து சுமார் 2 கிமீ தூரம் பயணித்துதான் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும். அதனால் மாணவர்களை அவர்களது பெற்றோர், வாகனத்தில் அழைத்து கொண்டு உள்ளே விடுவார்கள். அப்படி வாகனத்தில் செல்லும்போது வளாகத்தில் சுற்றி திரியும் மான்கள் விபத்தில் அடிப்பட்டு காயமடையும் நிலை உள்ளதாம். அதனால் பள்ளி நிர்வாகம் திடீரென ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது.

அதில், ‘1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களை மட்டுமே வாகனங்களில் பள்ளிக்குள் அழைத்து வரவும், அழைத்து செல்லவும் பெற்றோர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அதுவும் 20 கிமீ தூரத்தில்தான் வாகனங்களை இயக்க வேண்டும். அதற்கு மேல் வேகமாக சென்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களை அழைத்து கொண்டு விடவோ, அழைத்து வரவோ அனுமதி மறுக்கப்படுகிறது. 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களை பள்ளி நுழைவாயிலில் விட்டு செல்ல வேண்டும். அங்கிருந்து ஐஐடி நிர்வாகத்துக்கு சொந்தமான வாகனங்களில் மாணவர்கள் பள்ளிகளுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்’ என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு மாணவர்களின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை ஐஐடி நுழைவாயில் முன்பு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர் குவிந்தனர். பின்னர் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதற்கு அவர்கள், ‘எங்களது பிள்ளைகளை (மாணவர்கள்) வாகனங்களில் உள்ளே விட்டுவரவோ, அழைத்து வரவோ அனுமதி மறுக்கப்படுகிறது. ஐஐடிக்கு சொந்தமான வாகனங்களில் அழைத்து செல்வதாக நிர்வாகத்தினர் கூறுகின்றனர். அப்படி செல்லும்போது நெரிசலில் எங்களது பிள்ளைகள் சிக்கி தவிக்கிறார்கள். மேலும் நெரிசலில் உரசியபடி செல்லும் நிலை உள்ளது. வடமாநிலத்தவர்கள் பலரும் செல்வதால் பாதுகாப்பும் கேள்வி குறியாக உள்ளது. எனவே மாணவர்களை உள்ளே அழைத்து கொண்டு விடவும், அழைத்து கொண்டு வரவும் அனுமதிக்க வேண்டும்’ என்றனர். இதற்கிடையில் தகவலறிந்து பள்ளி தலைமை ஆசிரியர் சம்பவ இடத்துக்கு வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், சிலரை மட்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து கொண்டு உள்ளே சென்றார். அப்போது, சம்பந்தப்பட்டவர்கள் இல்லாததால் அந்த பெற்றோர்களும் திரும்பி வந்தனர். உரிய தீர்வு கண்டபிறகே கலைந்து செல்வோம் என்று பெற்றோர் கூறினர். இதனால் பரபரப்பு நிலவி வருகிறது.

 

The post மாணவர்களை உள்ளே அழைத்து கொண்டு விட, அழைத்து வர அனுமதி மறுப்பு: சென்னை ஐஐடி நுழைவாயில் முன் பெற்றோர் முற்றுகை போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai IIT ,VANAVANI FOUNDATION SCHOOL ,KANDRIYA VIDYALAYA ,IIT ,CHENNAI ,Dinakaran ,
× RELATED அரியானா ஜிண்டால் சர்வதேச...