சென்னை: வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் புதிய மழைநீர் வடிகால்கள் அமைத்தல், மழைநீர் வடிகால்கள், வண்டல் வடிகட்டித் தொட்டிகள் மற்றும் கால்வாய்கள் ஆகியவற்றில் வண்டல்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்று மேயர் ஆர்.பிரியா கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட வார்டு-127, 128, 129, 136 மற்றும் 138க்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகள், தூர்வாரும் பணிகள், தீவிரத் தூய்மைப் பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேயர், கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-127க்குட்பட்ட சின்மயா நகர் கால்வாயினைப் பார்வையிட்டு, கால்வாயில் காணப்படும் வண்டல்கள் மற்றும் கழிவுகளை அகற்றும் வகையில் உடனடியாக தூர்வாரும் பணியினை மேற்கொண்டு, பருவமழைக்கு முன்னதாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, வார்டு-128க்குட்பட்ட விருகம்பாக்கம் மயானபூமியினைப் பார்வையிட்டு, மயானபூமியில் தீவிரத் தூய்மைப் பணி மேற்கொண்டு சுத்தமாக பராமரித்திடவும், நவீனமயமாக்கி பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் மதிப்பீடு தயார்செய்து பணிகளை தொடங்கிடவும், இங்குள்ள மழைநீர் வடிகால்களை தூர்வாரிடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், இங்கு புதிதாக அமைக்கப்பட வேண்டிய மழைநீர் வடிகால் பணிகள் குறித்து விவாதித்து அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர், வார்டு-129க்குட்பட்ட போஸ்டல் ஆடிட் காலனி, பஞ்சாயத்து காலனி பகுதியில் விருகம்பாக்கம் கால்வாயில் இணைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்களுக்கு பதிலாக புதிய மழைநீர் வடிகால் அமைப்பதற்கு மதிப்பீடு தயார் செய்து பணியினை உடனடியாக மேற்கொண்டு முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், வார்டு-136க்குட்பட்ட 80 அடி சாலை, ஆற்காடு சாலையில் உள்ள மழைநீர் வடிகால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரிசெய்யும் வகையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, 18வது தெரு, 4வது செக்டார் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் இணைப்புப் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணியினை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ச்சியாக, வார்டு-138க்குட்பட்ட பச்சையப்பன் தெரு, அன்னை சத்யா நகர் மயானபூமியினைப் பார்வையிட்டு, எரிவாயு தகனமேடையின் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டு, மயானபூமியினை சுத்தமாக பராமரித்திட அறிவுறுத்தினார். பின்னர், எம்.ஜி.ஆர். நகர் கால்வாயில் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பக்கச்சுவர் அமைக்கும் பணியினைப் பார்வையிட்டார். மேலும், பாரதிதாசன் சாலையில் ரூ.6 கோடி மதிப்பில் 1250 மீ. நீளத்திற்கு புதிய மழைநீர் வடிகால் அமைப்பது குறித்துப் பார்வையிட்டு, சென்னைப் பெருநகர் குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் சாலை வெட்டு மேற்கொள்ளப்பட்ட சாலைக்கு தடையின்மைச் சான்றினை பெற்று சாலையினை விரைந்து சீரமைக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின்போது, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, மண்டலக்குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் பொ.லோகு, ஆர். ஸ்டெல்லா ஜாஸ்மின் ரத்னா, மு. ரவிசங்கர், து. நிலவரசி, கே. கண்ணன், மண்டல அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post கோடம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் மேயர் பிரியா appeared first on Dinakaran.