துரைப்பாக்கம்: திருவான்மியூரில் நேற்று மாலை ஒரு முதியவர் தவறவிட்ட கைப்பையை, அவரது செல்போனில் தொடர்பு கொண்ட தூய்மை பணியாளர் நேரில் வரவழைத்து ஒப்படைத்தார். சென்னை திருவான்மியூர், கலாஷேத்ரா சாலை வழியாக ரமணி (78) என்ற முதியவர், நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவர் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த கைப்பை தவறி விழுந்துவிட்டது. அதில், அவரது செல்போன் உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்களை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்த கைப்பையை முதியவர் ரமணி பல்வேறு இடங்களில் நீண்ட நேரமாக தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்றிரவு முதியவர் ரமணிக்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசிய நபர், தான் சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணி மேற்பார்வையாளராக வேலைபார்க்கும் விஜய் (25) என்றும், முதியவர் ரமணியின் கைப்பை சாலையில் கிடந்ததாகவும், தான் இருக்கும் இருக்குமிடத்தையும் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அந்நபர் குறிப்பிட்ட இடத்துக்கு முதியவர் ரமணி சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த தூய்மை பணி மேற்பார்வையாளர் விஜய், கலாஷேத்ரா சாலையில் தூய்மை பணியின்போது கீழே கிடந்த கைப்பையை கண்டெடுத்ததாகவும் கூறியுள்ளார். பின்னர் பகுதி மேற்பார்வையாளர் செல்வம் முன்னிலையில் முதியவர் ரமணியிடம் தூய்மை பணி மேற்பார்வையாளர் விஜய் கைப்பையை ஒப்படைத்தார். இருவருக்கும் முதியவர் ரமணி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
The post திருவான்மியூரில் முதியவர் தவறவிட்ட கைப்பையை ஒப்படைத்த தூய்மை பணியாளர் appeared first on Dinakaran.