திருத்தணி: பள்ளிப்பட்டு அருகே ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலையில் இருந்து நின்றுவிட்ட 5 பணியாளர்களின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக ரூ.2 கோடிக்கு பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. இதுகுறித்து இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கண்ட 5 பேரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பள்ளிப்பட்டு அருகே குமாரராஜிபேட்டை காலனியை சேர்ந்தவர் குப்பன். இவரது மகன் தமிழரசன் (25). இவரது நண்பர்களான அதே கிராமத்தை சேர்ந்த அரவிந்தன், பிரகாஷ் உள்பட 5 பேர், சோளிங்கரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தற்காலிக பணியாளர்களாக வேலைபார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் தமிழரசன் உள்பட 5 பேரும் திடீரென வேலையைவிட்டு நின்றுவிட்டனர்.
குறிப்பிட்ட ஒரு மாத இடைவெளியில் தமிழரசன் உள்பட 5 பேரின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக சுமார் ரூ.2 கோடிக்கும் மேலாக பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. இப்புகாரின்பேரில், சென்னையில் இருந்து இன்று காலை 5 வாகனங்களில் குமாரராஜிபேட்டைக்கு 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு வந்திறங்கினர். பின்னர் குமாரராஜிபேட்டையில் உள்ள தமிழரசன் உள்பட அவரது 5 நண்பர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருகிறது. சோதனையின்போது, கடந்த ஒரு மாத காலத்தில் தமிழரசன் உள்பட 5 பேரின் வங்கி கணக்குகளில் கணக்கில் வராத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
The post வங்கி கணக்கில் ரூ.2 கோடி பணப்பரிமாற்றம்; அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு appeared first on Dinakaran.