×
Saravana Stores

கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு குறைக்குமா?

சேலம்: சர்வதேச சந்தையில் 3 ஆண்டுகளாக இல்லாத வகையில் கச்சா எண்ணெய் விலை 67 டாலராக சரிந்துள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு குறைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு இந்தியாவில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிப்பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், காஸ் சிலிண்டர் விலை மாதத்திற்கு ஒருமுறையும், பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கும் நடைமுறையை பின்பற்றுகின்றனர். பெட்ரோலிய பொருட்களுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் 13 நாடுகள் அடங்கிய ஓபெக் கூட்டமைப்பு நிர்ணயிக்கும் சர்வதேச விலையில் தான், கச்சா எண்ணெய் கொள்முதலை உலக நாடுகள் மேற்கொள்கின்றன. இதில், ஐரோப்பிய நாடுகள் மற்றும் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது. அதிலும், மிக குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ெணயை இந்தியா பெறுகிறது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் ஏற்பட்ட காலத்தில், கச்சா எண்ணெய் விலை பெருமளவு சரிந்து பீப்பாய் 20 டாலருக்கு கீழ் வந்தது. அந்த நேரத்தில் ஒன்றிய அரசு, தங்களின் கலால் வரியை உயர்த்திக் கொண்டு, விலை குறைப்பு பலனை மக்களுக்கு வழங்கவில்லை. பின்னர் ரஷ்யா-உக்ரைன் போர் ஏற்பட்டவுடன் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 130 டாலர் வரை அதிகரித்தது. அதனால், கடந்த 2022 மார்ச், ஏப்ரல் மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு, மிக அதிகபட்சமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.115க்கும், டீசல் ரூ.111க்கும் விற்கப்பட்டது.

அந்த நேரத்தில், அரசியல் கட்சிகள், பொதுமக்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக 2022 மே 22ம் தேதி ஒன்றிய அரசு, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை முறையே ரூ.8, ரூ.6 குறைத்தது. அப்போது, நாடு முழுவதும் பெட்ரோல் விலை லிட்டருக்கு அதிகபட்சமாக ரூ.9.50ம், டீசல் அதிகபட்சமாக ரூ.7ம் குறைக்கப்பட்டது. பிறகு கடந்த மார்ச் 14ம் தேதி பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. இருப்பினும் நாடு முழுவதும் சராசரியாக பெட்ரோல் விலை ரூ.100க்கு அதிகமாகவும், டீசல் விலை ரூ.95க்கு அதிகமாகவும் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் சென்னையில் இன்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.63 ஆகவும், டீசல் ரூ.92.34 ஆகவும் விற்கப்படுகிறது. இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 3 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகு முதல்முறையாக தற்போது கச்சா எண்ணெய் விலை பீப்பாய் (பேரல்) ஒன்றுக்கு 70 டாலருக்கு கீழ் குறைந்துள்ளது. இதற்கு முன்பு, 2021 நவம்பரில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 66 டாலராக இருந்த நிலையில், ரஷ்யா-உக்ரைன் போரால் 2022 மே மாதம் முதல் 130 டாலர் வரை அதிகரித்தது. பின்னர் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட கச்சா எண்ணெய் விலை கடந்த ஏப்ரல் மாதம் 86 டாலராக இருந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை 67 டாலராக கடுமையாக சரிந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்திருப்பதற்கு, நுகர்வு குறைந்ததே காரணம் என பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஓபெக் தெரிவித்துள்ளது. சீனாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், பெட்ரோல் நுகர்வு குறைந்ததும் கச்சா எண்ணெய் விலை குறைவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
3 ஆண்டுக்கு பின் கச்சா எண்ணெய் விலை 67 டாலர் என்ற நிலைக்கு குறைந்து வந்திருப்பதால், அதன் பலன் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு, தினசரி கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி, இறக்குவதாக கூறியே தினசரி விலை மாற்றம் என்ற முடிவை அமலுக்கு கொண்டு வந்தது. ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ெணய் விலை குறைந்தால், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு பதிலாக நிலையாக வைத்துக்கொண்டு அதிக லாபத்தை சம்பாதித்து வருகிறது. இம்முறை 70 டாலருக்கு கீழ் கச்சா எண்ணெய் விலை சரிந்து வந்திருப்பதால், பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு குறைக்கும் என மக்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், அரியானா, ஜம்முகாஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் நடத்தப்படவுள்ளது. அதனால், பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

 

The post கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு குறைக்குமா? appeared first on Dinakaran.

Tags : EU government ,Salem ,Dinakaran ,
× RELATED கடும் நெருக்கடி தரும் புதிய மோட்டார்...