×
Saravana Stores

கிளாம்பாக்கம் ரயில் நிறுத்தத்தின் கட்டுமானப் பணிகள் தொடக்கம் :2025 ஜனவரி மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்ப்பு!!

சென்னை : சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிறுத்தம் அருகே ரயில் நிறுத்தம் அமைப்பதற்கான பணிகளை தெற்கு ரயில்வே தொடங்கியது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் பேருந்து நிலையத்திற்கு விரைவாக செல்ல போதிய வசதிகள் இல்லை என்று பயணிகள் புகார் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசின் நிதியுதவி அடிப்படையில், வண்டலூர், ஊரப்பாக்கம் இடையே திட்டமிடப்பட்டு இருக்கும் கிளாம்பாக்கம் ரயில் நிறுத்தத்திற்கான கட்டுமானப் பணிகளை தெற்கு ரயில்வே தொடங்கி உள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மூலம் ரூ.20 கோடி நிதி வழங்கி உள்ளது.

மேலும் ரயிலடியை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துடன் இணைக்கும் விதமாக ரூ.79 கோடி செலவில் ஸ்கை வாக் எனப்படும் உயர்மட்ட நடைபாலம் ஒன்றையும் சிஎம்டிஏ கட்டமைக்கிறது. இதன் மூலம் ரயிலில் இருந்து இறங்கியதும் பயணிகளால் விரைவாக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை சென்றடைய முடியும். தற்போது ரயில் நிறுத்தத்திற்கான சுற்றுச்சுவர், மழைநீர் வடிகால் அமைப்பு, நடைமேடைகளுக்காக மண் நிரப்பும் பணிகள் தொடங்கி உள்ளன. கிளாம்பாக்கம் ரயில் நிறுத்தத்தில் புறநகர் ரயில்களுக்கு 2 அதிவேக ரயில்களுக்கு 1 என மொத்தம் 3 நடைமேடைகள் அமைக்கப்படுகின்றன. 2025 ஜனவரி மாதத்திற்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கிளாம்பாக்கம் ரயில் நிறுத்தத்தின் கட்டுமானப் பணிகள் தொடக்கம் :2025 ஜனவரி மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்ப்பு!! appeared first on Dinakaran.

Tags : Klampakkam railway station ,Chennai ,Southern Railway ,Klambakak ,Glampakkam railway ,
× RELATED பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை –...