டெல்லி : ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிச.14 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்திய மக்களின் அடையாளமாக ஆதார் அட்டை திகழ்கிறது. வங்கிக் கணக்கு தொடங்குவது முதல் பான்கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஆதார் அட்டை அவசியமாகியுள்ளது. ஆதார் தனி மனிதனின் அடையாளமாக மாறியுள்ளது. இந்தியாவில் தாங்கள் எந்த பகுதியில் வசித்தாலும் ஆதார் பெறுவது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அன்றாட வாழ்க்கையில் ஆதார் அட்டை அத்தியாவசியமாக உள்ளது. எனவே தற்போது இந்தியாவில் அனைவரும் ஆதார் அட்டை வைத்துள்ளனர். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் தேர்வு எழுதும்போது பதிவுக்கான அட்டையாக ஆதார் அட்டை உள்ளதால் மாணவர்களுக்கும் ஆதார் அட்டையை தமிழ்நாட்டில் அரசே ஏற்பாடு செய்து முகாம்கள் மூலம் வழங்குகிறது.
இந்நிலையில் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதாரை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று ஆதார் ஆணையம் அறிவுறுத்தி வருகிறது. ஏன் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்றால், சிலர் தங்களது முகவரி மற்றும்் செல்போன் எண்களை மாற்றி இருப்பார்கள். மேலும் சிலருக்கு முக அமைப்புகள் மாறி இருக்கும். இவற்றைத் தவிர்க்கவே 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் புதுப்பிக்க வேண்டும் என ஆதார் ஆணையம் வலியுறுத்தி கூறுகிறது.இதற்காக 10 ஆண்டுகள் நிறைவடைந்தவர்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பப்படும். அவர்கள் அருகில் உள்ள ஆதார் மையங்களில் புதுப்பித்துக் கொள்ளலாம். அப்போது புகைப்படங்கள், கைரேகையை புதிதாக பதிவு செய்து கொள்ளலாம்.
இதையடுத்து, ஆதாரை இலவசமாக புதுப்பிக்க வருகிற 14ம் தேதி வரைதான் கால அவகாசம் உள்ளது என்ற தகவல் பரவியது. இதனால் இ- சேவை மையம் மற்றும் ஆதார் மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதின. கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 50 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் தங்கள் ஆதார் அட்டையினை புதுப்பித்துக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், பொதுமக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை அடுத்து, ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிச.14 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. டிச. 14-க்குள் ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பித்துக்கொள்ளலாம் என்று ஆதார் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதுப்பிக்காவிட்டாலும் அட்டை செயல்பாட்டில்தான் இருக்கும்
அப்படி புதுப்பிக்காவிட்டாலும் அட்டை செயல்பாட்டில்தான் இருக்கும். சேவைகள் எதுவும் பாதிக்காது. அதாவது வரும் டிசம்பர் 14ம் தேதி வரை பொதுமக்களே நேரடியாக ஆதார் இணையதளத்தில் முகவரியை உறுதி செய்யும் ஆவணங்களை பதிவேற்றினால் அதற்கு கட்டணம் கிடையாது. இலவசமாக முகவரி மாற்றத்தைப் பதிவு செய்யலாம். 14ம் தேதிக்கு பிறகு இந்த சேவைக்கு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். இதனை பலர் தவறாக புரிந்து கொண்டு, 14ம் தேதிக்குள் ஆதாரை புதுப்பிக்க வேண்டும், இல்லையெனில் ரத்தாகிவிடும் என்று தவறான தகவலை பரப்பிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post டிச. 14-க்குள் ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் : ஆதார் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.