×

இரிடியம் தருவதாக கூறி சிவகங்கை வரவழைத்து திருமங்கலம் கான்ட்ராக்டரிடம் 23.50 லட்சம் பணம் கொள்ளை: சகோதரர் உட்பட 9 பேர் கைது

சிவகங்கை: இரிடியம் தருவதாக கூறி வரவழைத்து திருமங்கலத்தை சேர்ந்த கான்ட்ராக்டரிடம் ரூ.23.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் சகோதரர் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.  மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே நேசனேரியை சேர்ந்தவர் பிச்சை மகன் ஆறுமுகம் (36). இவரது அண்ணன் குருசாமி(42). இருவரும் கான்ட்ராக்டர்கள். குருசாமிக்கும் திருச்சி, இந்திராநகரை சேர்ந்த அப்துல்ரகுமான்(60) என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. ஆறுமுகத்திடம் பணம் இருப்பதை குருசாமி மூலம் அறிந்த அப்துல் ரகுமான், ‘‘ரூ.25 லட்சத்திற்கு இரிடியம் வாங்கி விற்பனை செய்தால் ரூ.1 கோடி சம்பாதிக்கலாம். தற்போது ஒரு இடத்தில் இரிடியம் உள்ளது’’ என கூறியுள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் ரூ.23 லட்சத்து 50 ஆயிரம் பணத்துடன் ஆறுமுகம், சகோதரர் குருசாமியுடன் காரில் சிவகங்கைக்கு வந்தார்.  சிவகங்கை அருகே கரும்பாவூர் விலக்கு பகுதியில் வந்தபோது, முனியாண்டி என்பவர் இரிடியம் கொண்டு வருவதாக கூறி காரை குருசாமி நிறுத்தியுள்ளார். அப்போது கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த நபர்கள் ரூ.23.50 லட்சம் பணத்தை கொள்ளயைடித்துச் சென்றனர். இதையடுத்து இரிடியம் வாங்க வந்ததாக கூறினால் பிரச்னையாகும் என நினைத்து, இடம் வாங்க வந்ததாக கூறி சிவகங்கை தாலுகா போலீசில் ஆறுமுகம் புகார் செய்தார். இவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதையடுத்து சந்தேகமடைந்த போலீசார், எஸ்பி செந்தில்குமாரிடம் தகவல் தெரிவித்தனர். எஸ்பி உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை விசாரணையில், அப்துல்ரகுமான் இரிடியம் இருப்பதாக பொய் சொல்லி ஆறுமுகம், குருசாமியை வரவழைத்து ஆட்களை ஏற்பாடு செய்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஆறுமுகத்தின் சகோதரர் குருசாமி, அப்துல்ரகுமான் மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட டி.வேலாங்குளம் பூச்சி (எ) இருளப்பன், புதுக்குளம் இருளப்பன், மாத்தூர் அஜீத்குமார், வேலூர், சிப்காட் பாண்டித்துரை, மாத்தூர் ரமேஷ், உடுமலைப்பேட்டை, சுண்டக்காபாளையம் சாமிநாதன், தேவகோட்டை, போரடப்பு பாண்டியராஜன் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.23 லட்சத்து 50 ஆயிரம் பணம், கார் மற்றும் 2 டூவீலர்களை பறிமுதல் செய்தனர். முனியாண்டியை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்பி செந்தில்குமார் பாராட்டினார். …

The post இரிடியம் தருவதாக கூறி சிவகங்கை வரவழைத்து திருமங்கலம் கான்ட்ராக்டரிடம் 23.50 லட்சம் பணம் கொள்ளை: சகோதரர் உட்பட 9 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Sivaganga ,Sivagangai ,Trimangalam ,Dinakaran ,
× RELATED சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை...