×
Saravana Stores

கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுவரும் கண்ணாடி பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்: நெடுஞ்சாலைத்துறை அதிகாரி உத்தரவு


நாகர்கோவில்: கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி பாலப்பணியை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரி, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறை இடையே நெடுஞ்சாலைத்துறை மூலம் ₹37 கோடியில் கண்ணாடி பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. தமிழ்நாடு அரசு, நெடுஞ்சாலைத்துறை மூலம் கண்ணாடி பாலம் பணியை செய்து வருகிறது. இந்த பாலம் 77 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்பட உள்ளது. அதிகபட்ச கடல் அலைக்கு மேல் 7 மீட்டர் உயரத்தில் இப்பாலம் அமையும். இப்பாலத்தின் ஆர்ச் உயரம் 11 மீட்டர் ஆகும். முற்றிலும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கம்பிகள் மற்றும் 2.40 மீட்டர் அகலத்தில் கண்ணாடிப் பகுதியும், இரண்டு பக்கங்களில் கல் மண்டபமும் அமைக்கப்படுகிறது. இப்பாலத்தின் மாதிரி தொகுப்பு பாண்டிச்சேரியில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

கண்ணாடி கூண்டு பாலம் அமைப்பதற்காக திருவள்ளுவர் சிலை பக்கத்திலும், விவேகானந்தர் நினைவு மண்டபம் பக்கத்திலும் கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்து உள்ளது. தற்போது பாலத்தின் இரு பக்கத்தையும் இணைக்கும் ஆர்ச் அமைப்பு பொருத்துவதற்கான அடித்தள பணியான இரும்பு தூண்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை 25 நாட்களில் முடிக்க நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. கண்ணாடி பாலம் அமைக்கும் பணியை கடந்த சில தினங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு ஆய்வு செய்து பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமைப் பொறியாளர் சத்யபிரகாஷ் உத்தரவின் பேரில் நாகர்கோவில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் சத்தியமூர்த்தி, நேற்று பாலம் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். நடந்து வரும் பணிகளை பார்வையிட்ட அவர், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். அவருடன் உதவி கோட்டப்பொறியாளர் ஹெரால்டு ஆன்றனி உடன் சென்றார்.

The post கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுவரும் கண்ணாடி பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்: நெடுஞ்சாலைத்துறை அதிகாரி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Nagercoil ,Highways Department ,Thiruvalluvar statue ,Vivekananda Rock ,Dinakaran ,
× RELATED திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்ட 25ம்...