மேட்டூர்: மேட்டூர் அடுத்த கொளத்தூரில், 3வது நாளாக அதிகாலையில் கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை, வீட்டின் அருகே பட்டியில் இருந்த 5 செம்மறி ஆடுகளை கடித்து குதறிச்சென்றது. பலியான ஆடுகளை பார்வையிட சென்ற வனத்துறையினரை, கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளக்காரட்டூர், புதுவேலுமங்கலம் கிராமங்களில், கடந்த 3 நாட்களாக நள்ளிரவு நேரத்தில், ஆடுகளை சிறுத்தை வேட்டையாடி வருகிறது. இதனால், வனத்துறையினரை கண்டித்து, நேற்று முன்தினம் கொளத்தூர் வனத்துறை சோதனைச்சாவடியை, விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வனத்துறையினர் கூண்டு வைத்தும், கண்காணிப்பு கேமரா பொருத்தியும், இரவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை அதே பகுதியில் மீண்டும் சிறுத்தை நுழைந்தது. விவசாயி கோவிந்தராஜ் என்பவர் வீட்டின் அருகே, பட்டியில் கட்டியிருந்த 5 செம்மறி ஆடுகளை, சிறுத்தை கடித்து கொன்றது. இன்னொருவரின் கோழிகளையும் அடித்துக்கொன்றது. இதுகுறித்த தகவல் அறிந்த மேட்டூர் வனச்சரகர் சிவானந்தம் தலைமையில் வன ஊழியர்கள், வெள்ளக்காரட்டூர் கிராமத்திற்கு பார்வையிட சென்றனர். இதையறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து, வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக வெள்ளகரட்டூர் கிராமத்திற்கு வந்த சேலம் மாவட்ட உதவி வன அலுவலர் செல்வகுமார், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சிறுத்தையை பிடிக்க சத்தியமங்கலம், தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் பயிற்சி பெற்ற வன ஊழியர்களை வரவழைப்பதாகவும், அதிகப்படியான எண்ணிக்கையில் கூண்டுகள், கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, சிறுத்தை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதனையடுத்து கிராம மக்கள் சமாதானம் அடைந்தனர்.
மேலும், பகல் மற்றும் இரவு நேரங்களில் தனியாக யாரும் வெளியே செல்ல வேண்டாம். கவனமுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து, சிறுத்தையை கண்டவுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான குழுவையும் வரவழைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிராம மக்களிடம் வனத்துறையினர் தெரிவித்தனர்.
The post கொளத்தூரில் 3வது நாளாக அட்டகாசம்; அதிகாலையில் கிராமத்திற்குள் புகுந்து ஆடுகளை கடித்துக்குதறிய சிறுத்தை: வனத்துறையினருடன் கிராம மக்கள் வாக்குவாதம் appeared first on Dinakaran.