அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக செங்கல் உற்பத்தி தொழிலும், விசைத்தறி கூடங்களும் உள்ளன. இங்கு வசிக்கும் பொதுமக்கள் பொழுதுபோக்கிற்கு கோபியில் இருக்கும் கொடிவேரி அணை, பவானிசாகர் அணை என பிற பகுதிகளில் உள்ள இடங்களுக்கு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
அருகில் உள்ள வனப்பகுதியில் இருக்கும் வறட்டுப்பள்ளம் அணைக்கு பொதுமக்கள் சென்று பார்வையிட அனுமதி இல்லை. இருப்பினும், அந்தியூர் பகுதியில் கெட்டி சமுத்திரம் ஏரி, எண்ணமங்கலம் ஏரி, அந்தியூர் பெரிய ஏரி, சந்திபாளையம் ஏரி, வேம்பத்தி ஏரி, ஆப்பக்கூடல் ஏரி உள்ளிட்ட ஏரிகள் உள்ளன. இதில் கெட்டிசமுத்திரம் ஏரியும், அந்தியூர் பெரிய ஏரியும் எப்போதும் நீர் நிறைந்திருக்கும். இதனால், அந்தியூர் பகுதி மக்கள் நீண்ட காலமாக தங்கள் பகுதியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் பெரிய ஏரியில் படகு இல்லம் அமைத்து தர வேண்டும் என அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை உரிய திட்ட மதிப்பீட்டுடன் எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாசலம் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று சுற்றுலாத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் அந்தியூர் பெரிய ஏரியில் படகு இல்லம் அமைக்க ரூ 50 லட்சம் நிதியினை ஒதுக்கீடு செய்து தந்தார். இந்த ஏரி அந்தியூரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கொல்லப்பாளையம், வெள்ளித்திருப்பூர் செல்லும் மெயின் ரோட்டில், பொதுமக்கள் எளிதில் வந்து செல்லக்கூடிய வகையில் உள்ளது. எப்போதும் நீர் நிறைந்திருக்கும் நிலையில் நான்கு கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.
இந்த ஏரி தண்ணீர் மீன் வளர்ப்பிற்கும், விவசாயிகளின் பாசனத்திற்கும் பயன்பட்டு வருகிறது.அந்தியூர் நகரின் மையப்பகுதிக்கு அருகில் உள்ளது. இப்பகுதியில் படகு இல்லம் அமைக்க கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாசலம் தலைமையில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, கடந்த 7 மாதங்களில் இந்தப்படகு இல்லத்தில் நடைபாதை, புல் தரை, பளிங்குகல் இருக்கைகள், சுற்றுச்சுவர் அமைத்தல், சிற்றுண்டியகம், பயணச்சீட்டு வழங்கும் இடம், மிதிக்கும் படகுகள் நிறுத்தம், ஏரியின் மையப் பகுதியில் மிதக்கும் தெப்பம் மற்றும் படகு இல்லத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது.
இந்த பணிகளை எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாசலம் ஊட்டி படகுத்துறையை சேர்ந்த சாம்சங், ஜெகதீசன் மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்,“அந்தியூர் பகுதி மக்களுக்கு இதுவரை பொழுதுபோக்குவதற்கு அருகில் எந்த ஒரு இடமும் அமைத்து தரப்படவில்லை. ஆனால், தற்போது இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலையுடன் கூடிய பகுதியில் நீண்ட கால பொழுதுபோக்கு கோரிக்கை நிறைவேறும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள படகு இல்லம் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது’’ என்றார்.
The post அந்தியூர் மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறுகிறது; பெரிய ஏரியில் ரூ.50 லட்சத்தில் புதிய படகு இல்லம்: விரைவில் திறக்கப்படுகிறது appeared first on Dinakaran.