தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே, வயலில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை கடித்து குதறிய சிறுத்தையை, விவசாயி கல்லால் தாக்கி விரட்டி விட்டு, ஆட்டை மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இஸ்லாம்பூர், தண்டரை கிராமத்தின் பின்புறமுள்ள பாறை குன்றில், சிறுத்தை ஒன்று பதுங்கியிருந்தபடி, கடந்த 6 மாதமாக அங்கு உலாவி வருகிறது. இந்த சிறுத்தை அவ்வப்போது வெளியேறி, அங்கு சுற்றித்திரியும் தெரு நாய்கள் மற்றும் விவசாயிகள் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் ஆடுகளை அடித்து சாப்பிட்டு வருகிறது. இதுவரை 30க்கும் மேற்பட்ட தெருநாய்களையும், ஆடுகளையும் சிறுத்தை தாக்கி கொன்றுள்ளதாக கூறப்படுகிறது. தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க அப்பகுதியில் கூண்டு அமைத்துள்ளனர்.
ஆனாலும், இதுவரை சிறுத்தை கூண்டில் சிக்கவில்லை. நேற்று முன்தினம் மாலை, அடவிசாமிபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி தேவராஜ் என்பவர், அப்பகுதியில் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென அங்கு வந்த சிறுத்தை, மந்தைக்குள் புகுந்து ஒரு செம்மறியாட்டை வாயில் கவ்வி பிடித்து குதறியுள்ளது. இதை பார்த்து அச்சமடைந்த தேவராஜ், கீழே கிடந்த கற்களை எடுத்து சிறுத்தையை நோக்கி வீசி எறிந்துள்ளார். அவர் அடுத்தடுத்து கற்களை சரமாரியாக வீசியதால், சிறுத்தை ஆட்டை விட்டு விட்டு அங்கிருந்து ஓடி விட்டது. இதுகுறித்து அவர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற தேன்கனிக்கோட்டை வனத்துறையினர், சிறுத்தை நடமாட்டம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். சிறுத்தை கடித்ததில் படுகாயமடைந்த ஆட்டை, தேவராஜ் வீட்டிற்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகிறார்.
இந்த சம்பவம், அடவிசாமிபுரம் கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அடவிசாமிபுரம், இஸ்லாம்பூர், பண்டேஸ்புரம், தண்டரை, கொரட்டகிரி மற்றும் காமையூர் உள்ளிட்ட கிராமங்களில், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளை சிறுத்தை அடித்து கொன்று வருவதால், அப்பகுதி மக்கள் தங்களது ஆடு, மாடுகளை குறைந்த விலைக்கு விற்று வருகின்றனர். எனவே, கால்நடைகளை குறி வைக்கும் சிறுத்தையை, வனத்துறையினர் விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தேன்கனிக்கோட்டை அருகே பரபரப்பு சம்பவம்; சிறுத்தையை தாக்கி ஆட்டை மீட்ட விவசாயி: சரமாரி கற்களை வீசியதால் போட்டுச்சென்றது appeared first on Dinakaran.