பெங்களூரு: கலபுர்கியில் புதிதாக வாங்கிய எலக்ட்ரிக் பைக் 3 நாளில் 2 முறை பழுதடைந்த விரக்தியிலும் ஆத்திரத்திலும் பைக்கின் உரிமையாளர் எலக்ட்ரிக் பைக் ஷோரூமிற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலபுர்கியில் ஹூமனாபாத் சாலையில் உள்ள ஓலா எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் முகமது நதீம் என்பவர் ஒரு எலக்ட்ரிக் பைக் வாங்கியுள்ளார். பைக் வாங்கியதிலிருந்தே பிரச்னையாக இருந்துள்ளது. பைக் வாங்கிய 3 நாளில் 2 முறை பழுதடைந்ததால், 2 முறையும் ஷோரூமிற்கு எடுத்துச் சென்று சரி செய்துள்ளார்.
ஆனாலும் எலக்ட்ரிக் பைக்கில் இருந்த பிரச்னை சரியாகவில்லை. மீண்டும் பழுதடைந்ததால் ஆத்திரமடைந்த முகமது நதீம் ஷோரூமுக்கு சென்று ஊழியர்களிடம் விளக்கம் கேட்டபோது அது, வாக்குவாதமாக மாறியது. புதிதாக வாங்கிய பைக் பிரச்னையானது மற்றும் ஷோரூம் ஊழியர்களுடனான சண்டையின் விளைவாக, கடும் ஆத்திரமடைந்த முகமது நதீம், ஷோரூமில் இருந்த பைக்குகளின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் அங்கிருந்த அனைத்து பைக்குகளும் மற்ற சில பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகின. ஓலா எலக்ட்ரிக் பைக் ஷோரூமுக்கு தீ வைத்த முகமது நதீம், அங்கு தீயை வைத்துவிட்டு நேராக கலபுர்கி சவுக் காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறி சரணடைந்துவிட்டார். ஷோரூம் உரிமையாளர் இது தீ விபத்து என்று கூறியிருக்கிறார். ஆனால் தீ வைத்த நபரே நேரடியாக போலீசில் சரணடைந்தார்.
The post பைக் வாங்கி 3 நாளில் 2 முறை ரிப்பேர்.. எலக்ட்ரிக் பைக் ஷோரூமிற்கு தீ வைத்த வாடிக்கையாளர்: போலீசில் சரண் appeared first on Dinakaran.