வேலூர்: வேலூர் சிறைத்துறை டிஐஜி வீட்டில் ஆயுள் தண்டனை கைதி சிவக்குமாரை வேலைக்கு ஈடுபடுத்தி, ரூ.4.25 லட்சம் அவர் திருடியதாக தனி சிறையில் வைத்து தாக்கப்பட்ட சம்பவத்தில் வேலூர் சிறையில் டிஐஜி உட்பட 14 பேரிடம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்போது சேலம் சிறையில் உள்ள கைதி சிவக்குமாரிடம் நேற்று முன்தினம் சிபிசிஐடி போலீசார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதேநேரத்தில் டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் ஆகிய இருவரும் சென்னையில் உள்ள சிறைத்துறை டிஜிபி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு, விளக்கம் கேட்டு அறிக்கை பெறப்பட்டதாக தெரிகிறது.
இந்த சூழலில், சிபிசிஐடி எஸ்பி வினோத் சாந்தாராம் தலைமையில் 16 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை 10.30 மணியளவில் வேலூர் மத்திய சிறைக்கு வந்தனர். பின்னர் கைதி சிவக்குமார் அடைக்கப்பட்டிருந்த அறைகளை ஆய்வு செய்தனர். பின்னர் டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உட்பட 14 பேரிடம் தனித்தனியாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். மாலை 6.40 வரை இந்த விசாரணை நீடித்தது. தொடர்ந்து, 14 பேரிடம் நடத்திய விசாரணை அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கைதியை தாக்கிய சம்பவம்; வேலூர் சிறையில் டிஐஜி உட்பட 14 பேரிடம் சிபிசிஐடி விசாரணை appeared first on Dinakaran.