சென்னை: சென்னை பெரும்பாக்கம் பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது தொடர்பான வழக்கில் அப்பகுதிகளில் போதைப் பொருள் புழக்கம் உள்ளதாக வழக்கறிஞர் ஆணையர் அறிக்கை அளித்திருந்தார். இந்த அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், போதை பொருளை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கான பிரிவு முழு அளவில் செயல்பட்டு வருகிறது. போலீசார் ரோந்து வாகனங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள் ஆபத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்சிகள் நடத்தப்படுகிறது. திருவள்ளூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழுவின் அறிக்கையின் அடிப்படையில் கடப்பாக்கம் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை பார்த்த நீதிபதிகள், போதை பொருட்களை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை திருப்தியாக இல்லையென்றால் சிறப்பு புலனாய்வு அமைப்புக்கு இந்த பிரச்னையை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். இந்த வழக்கில் போதை பொருளை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 19ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
The post போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த கண்காணிப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன: ஐகோர்ட்டில் காவல்துறை அறிக்கை appeared first on Dinakaran.