சென்னை: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தில் புதிய மாற்றத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் தூரம் வரையிலான கட்டணத்தை செலுத்தினால் போதும். தற்போதுள்ள நடைமுறைப்படி முழுமையான சாலைக்கான கட்டணம் செலுத்த தேவையில்லை என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. சுங்கச்சாவடியில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கும் வகையில் பாஸ்ட் டிராக் முறை செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இருப்பினும் சில பகுதியில் உள்ள சுங்கச்சாவடி ஊழியர்களிடம் கட்டணம் செலுத்துவதில் வாக்குவாதம் ஏற்படுகிறது.
அதனை தொடர்ந்து செயற்கைக்கோள் அடிப்படையிலான குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் (GNSS) என்ற நடைமுறை மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. வாகனங்களில் செயற்கைக்கோள் இணைப்புக்கான ஆன் போர்ட் யூனிட் (On-Board Unit) எனப்படும் ஓபியூ என்ற கருவி பொருத்தப்பட உள்ளது. இந்த கருவி பொருத்தப்பட்ட வாகனம் சுங்க கட்டண சாலைகளில் பயணிக்கும்போது முதல் 20 கிலோ மீட்டருக்கு சுங்கக்கட்டணம் செலுத்த தேவையில்லை.
அதன்பிறகு அந்த வாகனம் பயணிக்கும் தூரம் செயற்கைக்கோள் வழியாக கணக்கிடப்பட்டு பாஸ்ட்டிராக்கை போலவே வங்கிக் கணக்கில் இருந்து கட்டணம் பிடித்தம் செய்யப்பட உள்ளது. ஆன் போர்டு யூனிட் என்ற சிறிய கருவியை பாஸ்டேக் போலவே அரசு இணையதளங்களில் வாங்கலாம். குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டத்தை பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலைகளில் தினமும் 20 கிலோ மீட்டர் வரை சுங்கக்கட்டணமின்றி சென்று வர அனுமதிக்கப்படும். இந்த சலுகையை தினமும் பயன்பாடுத்த முடியும்.
இதனால் சுங்கச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் தேசிய நெடுங்சாலைகளை ஒட்டி வசிக்கும் உள்ளூர் மக்கள் அந்தப்பகுதியில் கட்டணமின்றி சென்று வர வாய்ப்பு ஏற்படும். பெரும்பாலான வாகனங்களில் இந்த ஜிஎன்எஸ்எஸ் பயன்பாட்டுக்கு வந்த பிறகு சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். அதுவரை பாஸ்டாக் நடைமுறையோடு ஜிஎன்எஸ்எஸ் முறையிலும் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. அதாவது இரண்டும் ஒருங்கிணைக்கப்பட உள்ளது. கூடிய விரைவில் சுங்கச்சாவடிகளில் ஜிஎன்எஸ்எஸ் ஆன்போர்ட் யூனிட்டுகள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கென தனி பாதைகள் கட்டமைக்கப்பட உள்ளது என தேசிய நெடுஞ்சாலைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
The post குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் மூலம் 20 கிலோ மீட்டருக்கு சுங்கக்கட்டணம் இல்லை: ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை புதிய அறிவிப்பு appeared first on Dinakaran.