நைரோபி: இந்தியாவை போல கென்யாவிலும் ஜோமோ கென்யட்டா சர்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகள் பராமரிக்கும் ஒப்பந்தத்தை அதானி குழுமம் பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தால் வேலையிலிருந்து தாங்கள் நீக்கப்படும் அபாயம் இருப்பதாக கென்யா விமான நிலைய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே அதானியுடனான ஒப்பந்தத்தை கண்டித்து கென்யா விமான நிலைய ஊழியர்கள் சங்கம் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தியது.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக பல விமான நிலையங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. விமான நிலையத்தில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பலரும் தங்களின் விமானம் திட்டமிட்டபடி புறப்படுமா என உறுதி செய்ய முடியாமல் சிரமப்பட்டனர்.
மத்திய தொழிற்சங்க பொதுச் செயலாளர் பிரான்சிஸ் அட்வோலி அளித்த பேட்டியில், ‘‘ஊழியர்களின் பேச்சை அரசு கேட்டிருந்தால் இந்த வேலைநிறுத்தம் தவிர்க்கப்பட்டிருக்கும்’’ என்றார். இதற்கிடையே, இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும் வரை இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதை அந்நாட்டு உயர் நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
The post விமான நிலையத்தை பராமரிக்கும் ஒப்பந்தம் அதானிக்கு எதிராக கென்யாவில் போராட்டம்; விமான சேவை பாதிப்பு appeared first on Dinakaran.