வாஷிங்டன்: குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் உடனான முதல் நேரடி விவாதத்திற்கு பிறகு அவரை எதிர்த்து போட்டியிடும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு மேலும் அதிகரித்து வருகிறது. கமலா ஹாரிஸ் – டிரம்ப் இடையேயான முதல் நேரடி விவாதம் என்பதால் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒன்றரை மணி நேர நிகழ்வை அமெரிக்கா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருந்தது.
தொடக்கத்திலேயே டிரம்பை நோக்கி சென்ற கமலா ஹாரிஸ், யாரும் எதிர்பார்க்காத வகையில் அவருடன் கைகுலுக்கி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. விவாதத்தின்போது ரஷ்யா – உக்ரைன், இஸ்ரேல் – காசா போர்கள், கருக்கலைப்பு சட்டம், குடியேற்ற சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக அதிபர் வேட்பாளர்களான கமலா ஹாரிஸும், டிரம்பும் காரசாரமாக விவாதித்தினர். எந்தவொரு தயக்கமும் இன்றி அணித்தனமாக கருத்தை முன்வைத்த கமலா, விவாதத்தில் ஆதிக்கம் செலுத்தியதாக அமெரிக்க மக்கள் கூறுகின்றனர்.
டொனால்ட் டிரம்ப் உடனான விவாதத்திற்கு பிறகு கமலா ஹாரிஸுக்கு மக்களுடனான ஆதரவு அதிகரித்து இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். விவாதம் நிறைவடைந்த சில நிமிடங்களில் பிரபல பாப் இசை பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட், எதிர்வரும் அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு வாக்களிக்க விரும்புவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்க மக்களின் உரிமைகளுக்காக கமலா ஹாரிஸ் போராடுவதாக தன்னுடைய பதிவில் குறிப்பிட்டு இருக்கும் டெய்லர் ஸ்விஃப்ட், அவர் ஒரு உறுதியான, திறமைமிக்க தலைவர் என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.
The post டொனல்டு டிரம்ப் உடன் கமலா ஹாரிஸ் நேரடி விவாதம் எதிரொலி: அமெரிக்கா முழுவதும் கமலா ஹாரிசுக்கு ஆதரவு பெருகுகிறது appeared first on Dinakaran.