×
Saravana Stores

சென்னை பள்ளி மாணவிகளுக்கான கராத்தே மற்றும் டேக்வாண்டோ விளையாட்டுப் பயிற்சியினை தொடங்கி வைத்தார் மேயர் பிரியா..!!

சென்னை: 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, சென்னை பள்ளி மாணவிகளுக்கான கராத்தே மற்றும் டேக்வாண்டோ விளையாட்டுப் பயிற்சியினை மேயர் பிரியா இன்று (11.09.2024) குக்ஸ் சாலை, சென்னை உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். 2024-25ஆம் ஆண்டு நிதிநிலை அறிவிப்பின்படி, சென்னை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் குத்துச்சண்டை, ஜூடோ, கராத்தே, சதுரங்க விளையாட்டு, கேரம், டேக்வோண்டோ,

தடகள விளையாட்டுப் போட்டிகளில் சிறப்புப் பயிற்சி அளித்து, மண்டல, மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்குபெறச் செய்வதற்கு, தகுதிவாய்ந்த பயிற்சியாளர்கள் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு வரும் கல்வியாண்டில் 6 மாதங்களுக்கு பயிற்சி வகுப்புகள் வழங்கிடவும், விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கும், போட்டிகளில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக மாணவர்களை அழைத்துச் சென்று வரும் செலவினங்களுக்காகவும் ரூ.30 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், 2024-25ஆம் கல்வியாண்டில் மேயரின் 14வது அறிவிப்பான சென்னை பள்ளி மாணவிகளுக்கான கராத்தே, டேக்வோண்டோ பயிற்சியானது, திரு.வி.க.நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குக்ஸ் சாலை-சென்னை உயர்நிலைப்பள்ளி, இராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மணிகண்டன் தெரு-சென்னை உயர்நிலைப்பள்ளி, ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புத்தா தெரு-சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சைதாப்பேட்டை-சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேளச்சேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவான்மியூர்-சென்னை மேல்நிலைப்பள்ளி, திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காலடிப்பேட்டை-சென்னை உயர்நிலைப்பள்ளி என 6 சென்னை பள்ளிகளில் முதற்கட்டமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு பள்ளியிலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் 50 மாணவிகளை தேர்ந்தெடுத்து, வாரத்தில் 2 நாட்களில் 75 நிமிடங்கள், தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மூலமாக அதற்குத் தேவையான உபகரணங்களுடன் சரியான முறையில் பயிற்சிகள் கொடுக்கப்படும். 6 மாதங்கள் தொடர்ந்து நடைபெற உள்ள இந்தப் பயிற்சியின் முடிவில் பயிற்சி எடுத்துக் கொண்ட மாணவிகள் இடையே போட்டிகள் நடத்தப்படவும், மண்டல, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் கராத்தே போட்டிகளில் இவர்களை பங்கெடுக்கச் செய்து வெற்றி பெறச் செய்வதும், இந்த அறிவிப்பின் இலக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

மாணவிகள் உடல் வலிமையுடனும், மனத்திடத்துடனும், அறிவு வளத்துடனும், சமுதாய நோக்குடனும், சிறந்து விளங்கிடும் வகையில் மேயரின் இந்த அறிவிப்பானது திறம்பட தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, துணை மேயர் மகேஷ்குமார், இணை ஆணையாளர் (கல்வி) விஜயா ராணி, இ.ஆ.ப., திரு.வி.க.நகர் மண்டலக்குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள்
அம்பேத்வளவன், சரவணன், கல்வி அலுவலர் வசந்தி, பி.டி.எஃப். ஸ்கூல் ஆஃப் மார்சியல் ஆர்ட்ஸ் பயிற்சியாளர்கள் ரென்சி அய்யப்பன் மணி, சங்கீதா மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னை பள்ளி மாணவிகளுக்கான கராத்தே மற்றும் டேக்வாண்டோ விளையாட்டுப் பயிற்சியினை தொடங்கி வைத்தார் மேயர் பிரியா..!! appeared first on Dinakaran.

Tags : Mayor Priya ,CHENNAI ,Cooks Road, Chennai High School ,
× RELATED சென்னை மெரினா கடற்கரையில் விரைவில் ரோப் கார் வசதி; மேயர் பிரியா அறிவிப்பு!