×
Saravana Stores

வங்கிகள் சில்லரை நாணயங்களை தருவதை நிறுத்தியதால் சில்லரை தட்டுப்பாட்டால் தவிக்கும் தேனி

*வியாபாரிகள், பொதுமக்கள் வெகுவாக பாதிப்பு

தேனி : தேனியில் வியாபார கடைகள் மற்றும் ஹோட்டல்களில் சில்லரை தட்டுப்பாட்டால் வியாபாரிகளும் பொதுமக்களும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
தேனி நகரானது மாவட்ட நிர்வாக தலைநகராகவும், மாவட்டத்தின் முக்கிய வர்த்தக நகராகவும், கல்வி நகரமாகவும் , மருத்துவ நகரமாகவும் மாறி உள்ளது. பெருநகரங்களுக்கு இணையாக தேனியில் வர்த்தக நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களை திறந்து வருகின்றன.

இதன் காரணமாக மதுரை போன்ற நகரங்களுக்கு வர்த்தக ரீதியாக சென்ற தேனி மாவட்டத்து மக்கள் தற்போது தேனி நகரில் தங்களது வணிகங்களை முடித்துக் கொள்ளும் அளவிற்கு தேனி நகரானது வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக தேனி நகருக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து செல்கின்றனர்.

இத்தகைய நிலையில் தேனி நகரில் உள்ள பல சரக்கு கடைகள், பேன்சி கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட சிறு வணிகம் மற்றும் மொத்த வியாபார கடைகளில் பொருள்களை வாங்குவதற்காகவும் உணவருந்துவதற்காகவும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். தற்போது ஒன்றிய அரசு ரூ.10 மற்றும் ரூ. 20 நாணயங்களை அதிக அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிட்டுள்ளது. அதேசமயம், ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்கள் பெருமளவில் தட்டுப்பாட்டிற்கு உள்ளாகி உள்ளது.

கொரோனா தொற்று காலத்திற்கு முன்பு தேனியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வணிகர்களுக்கு தாராளமாக நாணயங்கள் பரிவர்த்தனை நடந்து வந்தது. ஆனால் தற்போது தேனியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வணிகர்களுக்கு சில்லரை காசுகளை பரிமாற்றம் செய்வதில் சுனக்கம் ஏற்பட்டுள்ளது. கொரோனா காலத்திற்கு முன்பாக சில்லரை நாணயம் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு ரூபாய் நாணயத்துடன் கூடிய 2500 ரூபாய் கொண்ட பைகளையும் , இரண்டு ரூபாய் நாணயங்களை கொண்ட ஐந்தாயிரம் ரூபாய் பைகளையும் ,ஐந்து ரூபாய் நாணயங்களை கொண்ட 12 ஆயிரம் ரூபாய் பைகளையும் பத்து ரூபாய் நாணயங்களை கொண்ட 20 ஆயிரம் ரூபாய் பைகளையும் வணிகர்களுக்கு வங்கிகள் வழங்கி வந்தன. தற்போது வங்கிகள் ஒரு ரூபாய், இரண்டு, மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை வணிகர்களுக்கு வழங்குவதை நிறுத்தியுள்ளதாக வணிகர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சில்லரை தட்டுப்பாட்டின் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு திருப்பி தர வேண்டிய ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் களுக்கு பதிலாக சாக்லேட் மிட்டாய்களை வழங்கும் நடைமுறை புழக்கத்திற்கு வந்துள்ளது. இதில் சர்க்கரை நோயாளிகள் தங்களுக்கு சாக்லேட் வேண்டாம் என்று சொன்னாலும் வியாபாரிகள் வேறு வழியில்லாமல் சாக்லேட்டை கொடுத்து அனுப்பும் அவல நிலை தொடர்ந்து வருகிறது.

இதுகுறித்து தேனியைச் சேர்ந்த வணிகர்கள் கூறுகையில், ‘‘மூன்று மாதத்திற்கு ஒருமுறை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலமாக வணிகர்கள் தங்களுக்கு தேவையான சில்லரை நாணயங்களை, ரூபாய் நோட்டுக்களை கொடுத்து பெற்று வந்தனர். ஆனால் தற்போது வங்கிகள் சில்லரை நாணயங்களை தருவதை நிறுத்தி உள்ளது. ஆரம்ப காலங்களில் சில்லரை நாணயங்களுக்காக பழனி சென்று முருகன் கோயிலில் உண்டியல் மூலமாக வசூல் ஆகும் நாணயங்களை அங்குள்ள வங்கிகளில் செலுத்துவதன் மூலம் நிறைந்திருக்கும் சில்லரை நாணயங்களை பெற்று வந்த நிலை இருந்தது.

இக்கால கட்டத்தில் வங்கிகளே சில்லரை நாணயங்களை தந்ததால் பழநி செல்லாமல் இங்கேயே நாணயங்களை பெற்று வந்தோம். தற்போது வங்கிகள் சில்லைரை நாணயங்களை தருவதை நிறுத்தியுள்ளதால் வணிகர்கள் சில்லரை தட்டுப்பாட்டால் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வங்கி நிர்வாகம் சில்லரை நாணயங்களின் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் சில்லரை நாணயங்களை வழங்க முன்வர வேண்டும்’’என்றனர்.

The post வங்கிகள் சில்லரை நாணயங்களை தருவதை நிறுத்தியதால் சில்லரை தட்டுப்பாட்டால் தவிக்கும் தேனி appeared first on Dinakaran.

Tags : Theni ,Dinakaran ,
× RELATED பள்ளி மாணவ, மாணவிகளின் படிப்பில் கவன...