ராமநாதபுரம் : நாட்டுக்காகவும், ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்துக்காகவும் உழைத்த இமானுவேல் சேகரன் வாழ்வை போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தி உள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் இன்று(புதன்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு கிராமங்களில் இருந்து முளைப்பாரி, பால்குடம் எடுத்து வந்து தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், கயல்விழி செல்வராஜ், பெரிய கருப்பன், மூர்த்தி மற்றும் நவாஸ் கனி எம்.பி., காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. நிர்வாகிகளும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.இதனிடையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,”விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாளான இன்று இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் சக அமைச்சர் பெருமக்கள் – நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களுடன் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தோம்.
நாட்டு விடுதலைக்காவும் – ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரது பிறந்த நாளை, நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசு விழாவாக அறிவித்தார்கள். மேலும், திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவு மணி மண்டபத்தையும் நம் திராவிட மாடல் அரசு அமைத்து வருகிறது. சமத்துவம் படைக்க சமரசமற்ற போராளியாக வாழ்ந்து மறைந்த தியாகி இமானுவேல் சேகரனாரின் புகழ் ஓங்கட்டும்!,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,”தீண்டாமையை ஒழிக்கவும் – சமூக விடுதலைக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களது நினைவு நாள் இன்று. நாட்டுக்காகவும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்துக்காகவும் உழைத்த அவரது வாழ்வைப் போற்றுவோம்!சமத்துவமும் – சமூகநல்லிணக்கமும் மிளிர்ந்த சமூகத்தை நோக்கிய நமது பயணத்துக்கு அவரது தொண்டு உரமாகட்டும்!”இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
The post நாட்டுக்காகவும், ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்துக்காகவும் உழைத்த இமானுவேல் சேகரன் வாழ்வை போற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி appeared first on Dinakaran.