×
Saravana Stores

நெல்லையில் ரூ.4,300 கோடி முதலீட்டில் சூரிய மின்சார பேனல்கள் உற்பத்தி தொடங்கியது டாடா நிறுவனம்

* 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு, 80% பெண்கள் மூலம் இயங்கும் ஆலை

நெல்லை: நெல்லை கங்கைகொண்டானில் டாடா நிறுவனம் ரூ.4,300 கோடியில் உருவாக்கியுள்ள சூரிய மின்சார தகடுகள் ஆலையில் வணிக ரீதியான உற்பத்தி தொடங்கியுள்ளது. தற்போது 2 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்யும் அளவிற்கு பேனல்கள் உற்பத்தி நடந்து வரும் நிலையில் வரும் 4 முதல் 6 வாரங்களில் முழு இலக்கான 4 ஆயிரம் மெகாவாட் சூரிய மின்சக்தி தகடுகள் உற்பத்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா பவர் புதுப்பிக்க எரிசக்தி நிறுவனத்தின் சார்பில், நெல்லை கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் சூரிய மின் சக்தி தகடுகள், மின்கலன்கள் உற்பத்தி ஆலை அமைக்க கடந்த 2022ம் ஆண்டு சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து ரூ.4,300 கோடி முதலீட்டில் கங்கைகொண்டானில் சூரிய மின்சக்தி ஆலை அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இந்த ஆலையில் 4.3 ஜிகாவாட் (4,300 மெகாவாட்) மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட சூரிய மின்சார தகடுகள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் கங்கைகொண்டான் டாடா சோலார் நிறுவனத்தில் சூரிய மின்சார தகடுகள் வணிக ரீதியான உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. சூரிய மின்சார தகடுகள், அதற்கான மின்கலன்கள் (பேட்டரிகள்) இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. உயர்ந்த தரத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் சோலார் தகடுகள், மின் கலன்கள் பசுமையான மின்சார உற்பத்திக்கான எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் என நம்பப்படுகிறது.

இங்கு பரீட்சார்த்த முறையில் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இதுவரை 1,250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவிற்கு சூரிய மின் தகடுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது வணிக ரீதியிலான மின் தகடுகள் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது 2 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்யும் அளவிற்கு சூரிய மின் தகடுகள், மின் கலன்கள் உற்பத்தி நடந்து வருகிறது. முழு உற்பத்தியான 4,300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் தகடுகள், மின்கலன்கள் உற்பத்தி அடுத்த 4 முதல் 6 வாரங்களில் எட்டப்படும்.

அடுத்தடுத்த மாதங்களில் உற்பத்தி அதிகரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆலையில் உற்பத்தி தொடங்கி உள்ளதால் சுமார் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து உள்ளது. இதில் 80 சதவீதம் பேர் பெண்கள். இதன் மூலம் அதிகம் பெண்களை கொண்டு இயக்கப்படும் சூரிய மின்சக்தி தகடு உற்பத்தி ஆலை என்ற பெருமையையும் இந்த ஆலை பெற்றுள்ளது.

இதுகுறித்து டாடா பவர் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பிரவீர் சின்ஹா கூறுகையில், இந்தியாவில் சூரிய மின் தகடுகள் தயாரிக்கும் மிகப் பெரிய ஆலை கங்கைகொண்டானில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் ‘ஜீரோ கார்பன்’ என்ற நிலை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. உலகில் மாசு இல்லாத பசுமையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சூரிய மின் தகடுகள் உற்பத்தியில் 41 சதவீதம் என்பதை வரும் 2030க்குள் 70 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

* முதலீட்டாளர் மாநாட்டின் ‘சக்ஸஸ்’
தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார். இதற்காக பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே துபாய் சென்று முதலீடுகளை திரட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்போது அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் சென்னையில் 2022ல் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் டாடா சோலார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு, தற்போது மின் உற்பத்தியை தொடங்கியுள்ளது முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு கிடைத்த வெற்றி என நிரூபிக்கப்பட்டுள்ளது.

The post நெல்லையில் ரூ.4,300 கோடி முதலீட்டில் சூரிய மின்சார பேனல்கள் உற்பத்தி தொடங்கியது டாடா நிறுவனம் appeared first on Dinakaran.

Tags : Tata Company ,Nella ,Nellie ,Tata ,Gangaikondan ,Dinakaran ,
× RELATED திருக்குறுங்குடியில் யானை...