நெமிலி: நெமிலி பகுதியில் மாணவ, மாணவிகள் பஸ் படியில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்வதை தடுக்க கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மற்றும் தக்கோலத்தில் இருந்து நெமிலி வழியாக வேலூருக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பனப்பாக்கத்தில் இருந்து ஓச்சேரி வழியாக ஆற்காட்டிற்கு அரசு டவுன் பஸ்கள் செல்கிறது. இதில் மேற்கண்ட ஊர்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஏராளமான மாணவ, மாணவிகள் தினமும் சென்று வருகின்றனர். ஆனால் போதிய பஸ் வசதி இல்லாததால் இந்த பஸ்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
அப்போது மாணவர்கள் படிக்கட்டில் நின்றுகொண்டு ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் கூட்டம் அதிகமாக இருக்கும்போது ஒருசில இடங்களில் பஸ்கள் நிறுத்தப்படுவதில்லையாம். எனவே, உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து அனைத்து நிறுத்தத்திலும் அரசு பஸ்களை நிறுத்தி மாணவ மாணவிகளை ஏற்றி செல்லவேண்டும், பள்ளி, கல்லூரி நேரத்தில் மேற்கண்ட வழித்தடங்களில் கூடுதல் பஸ்களை இயக்கவேண்டும என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பஸ் படியில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்: கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை appeared first on Dinakaran.