ஏற்காடு: சென்னையில் இருந்து ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்தவர்களின் பஸ் ஒன்று, நேற்று மாலை கீழே இறங்கும் போது மலைப்பாதையின் 14வது கொண்டை ஊசி வளைவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக 40 சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர். விநாயகர் சதுர்த்தி விழா விடுமுறையையொட்டி வெளிமாநிலம், மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு படையெடுத்தனர். சென்னையில் இருந்து ஏற்காட்டை சுற்றிப்பார்க்க குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என 40 பேர் தனி பஸ்சில் வந்தனர். இந்த பஸ்சை டிரைவர் முருகேசன் (51) என்பவர் ஓட்டிவந்தார். அவர்கள் ஏற்காட்டில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இரண்டு நாட்கள் சுற்றிப்பார்த்தனர். பின்னர் நேற்று மாலை சென்னை செல்வதற்காக புறப்பட்டனர்.
ஏற்காடு மலைப்பாதையில், 14வது கொண்டைஊசி வளைவு பகுதியில் சென்ற போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது. வளைவில் திரும்பிய பஸ், நேராக பள்ளத்தை நோக்கி சென்றது. பஸ்சில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். அப்ேபாது பஸ் கொண்டை ஊசி வளைவில் இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி நின்றது. இதனால் பஸ்சுக்குள் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதிர்ஷ்டவசமாக பஸ்சில் பயணம் செய்த 40 பேரும் உயிர்தப்பினர். உடனடியாக பஸ்சை விட்டு அவர்கள் கீழே இறங்கினர். தகவல் அறிந்து வந்த ஏற்காடு போலீசார் மற்றும் அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் லேசாக அடிபட்டவர்களை மீட்டனர். பின்னர் பஸ் மீட்கப்பட்டது. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து, டிரைவர் முருகேசனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
The post ஏற்காடு மலைப்பாதையில் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு நின்ற சென்னை பஸ்: 40 பயணிகள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.