×
Saravana Stores

இறை நம்பிக்கை கொண்டவர்கள் போற்றுகின்ற ஆட்சி: அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்


சென்னை: சென்னை திருவான்மியூரில் பாம்பன் சுவாமி கோயிலில் உபயதாரர் நிதி ரூ.13 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ரதத்தினை பக்தர்கள் பயன்பாட்டிற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், திராவிட மாடல் ஆட்சியில் பல நூறு ஆண்டுகளுக்கு மேல் குடமுழுக்கு நடைபெறாமல் இருந்த திருக்கோயில்கள், நீதிமன்ற வழக்கின் காரணமாக திருப்பணிகளுக்கு தடை இருந்த நிலையில் துரிதமான செயல்பட்டு சட்டப்போராட்டம் நடத்தி குடமுழுக்குகளை நடத்தி வருகின்றது. அந்த வகையில் பாம்பன் சுவாமி கோயிலுக்கு 66 ஆண்டுகளுக்கு பின் 18 ஆண்டுகள் நிலுவையில் இருந்த நீதிமன்ற வழக்கினை முடித்து குடமுழுக்கு செய்த பெருமை இந்த ஆட்சிக்கு உண்டு.

பாம்பன் சுவாமி கோயில் மொத்த நிலப்பரப்பான 3.11 ஏக்கரில் எங்கு அமர்ந்திருந்தாலும் ஒரு நல்ல உணர்வினை உணரமுடியும். 1958ம் ஆண்டிற்கு பிறகு கடந்த ஜூலை 12ம் தேதி வெகு விமர்சையாக குடமுழுக்கு நடைபெற்றது. பாம்பன் கோயிலை நிர்வகிக்க பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த குப்புசாமி இக்கோயிலை இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைத்து இன்றோடு 40 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. தற்போது ரூ.13 லட்சம் செலவில் உபயதாரர் சதீஷ்குமார் பதிய திருத்தேரினை உருவாக்கி கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார்.இந்த கோயிலில் திங்கள், புதன், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 500 நபர்களுக்கும், செவ்வாய், வியாழன், வெள்ளி, பௌர்ணமி, சஷ்டி, கிருத்திகை ஆகிய நாட்களில் 800 நபர்களுக்கும், சித்ரா பௌர்ணமி, குருபூஜை மற்றும் மயூர வாகன சேவன விழா ஆகிய நாட்களில் ஆயிரம் நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இதுவரையில் 2,098 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்ட நிலையில் வருகின்ற 15ம் தேதி 86 கோயில்களும், 16ம் தேதி 25 கோயில்களுக்கும் குடமுழுக்கு நடைபெற உள்ளது. கோயில்களுக்குச் சொந்தமான ரூ.6,073 கோடி மதிப்பிலான 6,853.14 ஏக்கர் நிலங்கள் இதுவரையில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த அரசு பொறுப்பேற்றபின் பல்வேறு கோயில்களுக்கு உபயதாரர்கள் மனமுவந்து தாராளமாக நிதியை வழங்கி வருகின்றனர். இதுவரை ரூ. 1,012 கோடி உபயதாரர் நிதியாக வரப்பெற்றுள்ளது. இந்த அரசு பொறுப்பேற்றபின் ரூ.59 கோடி மதிப்பீட்டில் 97 புதிய மரத்தேர்கள் செய்யப்பட்டு வருவதோடு ரூ.11.92 கோடி மதிப்பீட்டில் 53 தேர்கள் மராமத்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ. 28.44 கோடி மதிப்பீட்டில் 172 தேர்களுக்கு பாதுகாப்பு கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ரூ. 29 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தங்கத்தேர்களும், ரூ. 27.16 கோடி மதிப்பீட்டில் 9 புதிய வெள்ளித்தேர்களும் செய்யப்பட்டு வருகின்றன. இதில் பெரியபாளையம் புதிய தங்கத்தேர் வருகின்ற 14ம் தேதி வெள்ளோட்டம் விடப்பட்டு பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்த செலுத்தும் வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. திருத்தணி புதிய வெள்ளித்தேர் பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளது. இப்படி எண்ணற்ற சாதனைகளை புரிந்து வருகின்ற திராவிட மாடல் ஆட்சியில் இறை நம்பிக்கை கொண்டவர்கள் மகிழ்ச்சியடைந்து போற்றுகின்ற ஆட்சியாக இந்த அரசு வீறுநடை போட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தர், கூடுதல் ஆணையர் சுகுமார், இணை ஆணையர் ரேணுகாதேவி, செயல் அலுவலர் முரளிதரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post இறை நம்பிக்கை கொண்டவர்கள் போற்றுகின்ற ஆட்சி: அமைச்சர் சேகர்பாபு பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekharbabu Purumitha ,CHENNAI ,Hindu ,Religious ,Charities ,PK Shekharbabu ,Rath ,Pamban Swamy temple ,Thiruvanmiyur, Chennai ,Shekharbabu ,Chief Minister ,
× RELATED கட்சிக்கு துரோகம் செய்வோரை ஒருபோதும்...