×

குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க அரை நிர்வாணத்துடன் வந்த ஊராட்சி தலைவர்

*பெரம்பலூரில் பரபரப்பு

பெரம்பலூர் : பறிக்கப்பட்ட காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை வழங்கக் கோரி, வி.களத்தூர் ஊராட்சிமன்றத் தலைவர் உடலில் நாமம் வரைந்து அரை நிர்வாணத்துடன் புகார் மனு அளிக்க வந்ததால் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று (9ஆம்தேதி) திங்கட்கிழமை காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் வேப்பந்தட்டை தாலுக்கா, வி.களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பிரபு என்பவர், வேட்டி மட்டும் அணிந்து கொண்டு உடம்பில் வெள்ளை சுண்ணாம்பில் நாமம் வரைந்து அரை நிர்வாணத்துடன் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று புகார் மனு அளிக்க வந்திருந்தார்.ஏற்கனவே 9ஆம் தேதி நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்து, நிர்வாண போராட்டம் நடத்தி புகார்மனு அளிக்க உள்ளதாக இவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்ததால், உஷாரான மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி உள்ளிட்டோர் நேற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பாக காத்திருந்தனர்.

அப்போது இடுப்பில் வேட்டி மட்டும் அணிந்து, மேலே வெற்று உடம்பில் வெள்ளை நிறத்தில் நாமம் வரைந்தபடி, கையில் புகார் மனுவுடன் வந்த பிரபுவை வழிமறித்த இன்ஸ்பெக்டர் பாலாஜி, போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சி முடிவடையும் வரை காத்திருக்க செய்து, பின்னர் பிரபுவிடம் மேல் சட்டை அணியச் சொல்லி, குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கிற்கு அழைத்துச் சென்று, அவரது புகார் மனுவை அளிக்கச் செய்தார்.

அந்த மனுவில், சென்னை உயர்நீதிமன்ற ஆணைப் படி, என்னிடமிருந்து சட்ட விரோதமாக பறிக்கப்பட்ட காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை உடனே வழங்க வேண்டும். ஊராட்சி சட்டங்கள் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காமல், என்னை வன் கொடுமை செய்து, சட்ட விரோத உத்தரவுகள் மூலம் ஊராட்சி நிதியை கூட்டு சதிசெய்து கொள்ளையடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ், விசாரணைசெய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதிஅளித்ததைத் தொடர்ந்து பிரபு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

The post குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க அரை நிர்வாணத்துடன் வந்த ஊராட்சி தலைவர் appeared first on Dinakaran.

Tags : panchayat ,Perambalur Perambalur ,president ,V. Kalathur ,Perambalur ,Dinakaran ,
× RELATED அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய பாஜக ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்