×

திருமூர்த்தி அணையில் தடையை மீறி நுழையும் சுற்றுலா பயணிகள்

*காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா?

உடுமலை : தடையை மீறி திருமூர்த்தி அணை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.உடுமலை அருகேயுள்ள சுற்றுலா தலமான திருமூர்த்திமலையில் திருமூர்த்தி அணை உள்ளது. பிஏபி தொகுப்பு அணைகளில் இது கடைசி அணையாகும். இந்த அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
திருமூர்த்திமலை வரும் சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.

மேலும், அமணலிங்கேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்வதுடன், பொதுப்பணித்துறை விடுதி பகுதியில் சாலையோரம் நின்று திருமூர்த்தி அணையை ரசித்து செல்வது வழக்கம். சிலர் ஆர்வ கோளாறு காரணமாக அணை தண்ணீர் உள்ள பகுதியில் இறங்கி சென்று வந்தனர். அங்கு புதைகுழி இருப்பதால் கடந்த காலங்களில் பலர் புதைமணலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

எனவே, பொதுப்பணித்துறை சார்பில் சுமார் 750 மீட்டர் தூரத்துக்கு கம்பி வேலி அமைக்கப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் அணையில் இறங்காமல் இருந்தனர். மேலும், ஆபத்தான பகுதி யாரும் செல்லக்கூடாது என காவல்துறை சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. போலீசாரும் அவ்வப்போது கண்காணிப்பில் ஈடுபட்டனர்.இந்நிலையில், சமீப காலமாக கம்பி வேலி பல இடங்களில் சேதமடைந்துள்ளது.

இதன் வழியாக சுற்றுலா பயணிகள் அணை பகுதிக்கு செல்கின்றனர். அணை கரையில் அமர்ந்து செல்பி எடுக்கின்றனர். சிலர் ஆபத்தான பகுதியில் இறங்கி குளிக்கின்றனர். இதனால், அவர்கள் புதை குழியில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே, கம்பி வேலியை சீரமைக்க வேண்டும். போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருமூர்த்தி அணையில் தடையை மீறி நுழையும் சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Tirumurthy Dam ,Udumalai ,Thirumurthy Dam ,Thirumurthimalai ,PAP ,
× RELATED 335 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்