×
Saravana Stores

ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரத்தில் டிஐஜி உள்பட 14 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு

வேலூர்: வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது. வேலூரில் கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரத்தில் 14 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் எஸ்.பி. உள்ளிட்ட 14 அதிகாரிகள், காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறைக் காவலர்கள் ரஷீத், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்ச்செல்வன், விஜி உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு ஆகி உள்ளது.

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கலாவதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கொலை குற்றத்திற்காக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எனது மகன் சிவகுமாரை சிறைத்துறை அதிகாரிகள் வீட்டு வேலைக்கு பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டு இருந்தார்.

காவல் அதிகாரி வீட்டில் ரூ. 4.5 லட்சம் மதிப்பில் நகை மற்றும் பணத்தை திருடியதாக குற்றம் சாட்டி கடுமையாக தாக்கி கொடுமைபடுத்தியுள்ளனர். இதில், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிறை கைதியை சட்டவிரோதமாக வீட்டு வேலைகளை செய்ய பயன்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், தவறு செய்த அதிகாரிகள் மீது விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அதிகாரிகள் மீது விசாரணை நடத்த காவல்துறை இயக்குநர் உத்தரவிட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட சிவக்குமாரை வேலூர் மத்திய சிறையில் இருந்து சேலம் சிறைக்கு உடனடியாக மாற்ற வேண்டுமென்றும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுபோல், பாதிக்கப்பட்ட சிவக்குமாருக்கு மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும்.

இந்த உத்தரவின் அடிப்படையில் வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலக்ஷ்மி மற்றும் சிறை அதிகாரிகள் என 14 பேர் மீது சிபிசிஐடி வழக்கு பதிவு செய்து விசாரணை துவக்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட சிறைத்துறை டிஐஜி மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

The post ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரத்தில் டிஐஜி உள்பட 14 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : CBCID ,DIG ,Vellore ,Prison Department ,Rajalakshmi ,Dinakaran ,
× RELATED டி.ஐஜி ராஜலட்சுமியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!