- அமைச்சர்கள்
- I. பெரியசாமி
- ஏ.சக்ரபாணி
- திண்டுக்கல்
- இளைஞர் நலன்
- விளையாட்டு அபிவிருத்தி
- அமைச்சர்
- உதயநிதி
- தின மலர்
*அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி வழங்கினர்
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு ரூ.123.54 கோடி மதிப்பீலான வங்கிக் கடன் இணைப்புகளை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி மற்றும் அர.சக்கரபாணி ஆகியோர் வழங்கினர்.இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மதுரையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழகம் முழுவதும் மகளிர் சுயஉதவி குழுவினர்களுக்கு ரூ.2,735 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கினார். அதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார்.
திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம், பழனி எம்.எல்.ஏ., ஐ.பி.செந்தில்குமார், வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்தி ராஜன், திண்டுக்கல் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மாவட்ட ஊராட்சி தலைவர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் மகளிர் சுய உதவி குழுவினருக்கு வங்கி கடனுக்கான ஆணைகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர், மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு அதிகளவில் கடனுதவிகள் வழங்கி பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழகம் முழுவதும் மகளிர் சுயஉதவி குழுவினர்களுக்கு ரூ.2,735 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கும் பணியை மதுரையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 10,050 குழுக்களும், நகர்ப்புற பகுதிகளில் 3,964 குழுக்களும் என மொத்தம் 14,014 மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.வங்கி கடன் இணைப்பாக கடந்த 2021-22ம் நிதியாண்டில் 18,876 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.992.20 கோடியும், 2022-23ம் நிதியாண்டில் 14,779 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.828.60 கோடியும், 2023-24ம் ஆண்டிற்கு 14,021 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.921.00 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. 2024-25ம் ஆண்டிற்கு ரூ.1,023 கோடி வங்கி கடன் இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டு, இதுவரை 3,953 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.280.12 கோடி வங்கி கடனாக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில், திண்டுக்கல் மாவட்டத்தில் 1572 குழுக்களைச் சேர்ந்த 18,223 மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு ரூ.123.54 கோடி மதிப்பீட்டிலான வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்படுகின்றன என்றார்.விழாவில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக பதவி வகித்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பெண்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காகவும் மகளிர் சுயஉதவிக்குழுவை தொடங்கினார்.
இதன்மூலம் பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட வழிவகை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் பெண்களின் முன்னேற்றத்தை நோக்கியே அரசின் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கூட்டுறவுத் துறையில் மகளிர் சுயஉதவிக் குழுவினரின் கடன்கள் மற்றும் 5 பவுனுக்கு குறைவான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு கூட்டுறவு கடன் தொகை ரூ.12 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சம் வரை உயர்த்தி வழங்கப்படுகிறது என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சதீஸ்பாபு, உதவி திட்ட அலுவலர்கள் வெற்றிச்செல்வம், ராம்குமார், ஜீவரம்யா, பிரியங்கா, அருண்குமார், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சிவகுருசாமி, ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத்தலைவர் ராஜேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுப்புலட்சுமி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சுமதி, ஊராட்சி மன்ற தலைவர் வேல்மணி, திமுக ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, அகரம் பேரூராட்சி தலைவர் நந்தகோபால், மாநகராட்சி மண்டல தலைவர் ஜான் பீட்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.123.54 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் உதவிகள் appeared first on Dinakaran.