×
Saravana Stores

மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த 766 பயனாளிகளுக்கு ரூ.37.35 கோடியில் கடனுதவிகள்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் 388 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 766 பயனாளிகளுக்கு ரூ.37.35 கோடி மதிப்பில் கடனுதவிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் வழங்கினார்.தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில், மதுரை மாவட்டம், ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2735 கோடி மதிப்பில், வங்கிக்கடன் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான மாபெரும் வங்கி கடன் உதவிகள் வழங்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்ததன் அடிப்படையில் நீலகிரி மாவட்டம், ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு, 388 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சார்ந்த 766 பயனாளிகளுக்கு ரூ.37.35 கோடி மதிப்பில் கடனுதவிகளை வழங்கினார். அதன்பின், அவர் பேசியதாவது:

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி பொறுபேற்றதும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்களை ரத்து செய்தார். ஆண்களுக்கு நிகராக மகளிரும் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு கடனுதவிகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

கடனுதவிகள் பெறும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் எந்தவொரு தொழில் தொடங்கினாலும், அதனை ஆர்வத்துடனும், முழு ஈடுபாட்டுடனும் மேற்கொண்டு வந்தால், அந்த தொழிலில் நீங்கள் லாபம் ஈட்டி, வெற்றி பெற முடியும். சுய தொழில் துவங்கும் மகளிர்கள் முறையாகவும், தெளிவாகவும் திட்டமிட்டு செயல்பட வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் நமது மாநிலத்தின் வளர்ச்சியை 2030க்குள் 1 டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்பதற்காக பல்வேறு நாடுகளுக்கு சென்று தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியதன் மூலம் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

தற்போது கூட அமெரிக்கா சென்று பல்வேறு புதிய தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம், நமது மாநிலத்தில் தொழில் துவங்கப்பட்டால், அரசுக்கு வரி வருவாய் கிடைக்கும். இந்திய அளவில் தமிழ்நாடு அதிகளவு ஜிஎஸ்டி கட்டுவதில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிகழ்ச்சியின் வாயிலாக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடனுதவிகளை வைத்து, மகளிர் சொந்தமாக தொழில் துவங்கலாம்.

மேலும், விவசாயம், தேயிலை மற்றும் காபி தோட்டங்களை குத்தகைக்கு எடுத்தல், மண்பாண்டம் தயாரித்தல், நீலகிரி தைலம் தயாரித்தல், தேன் எடுத்தல், தேங்காய் எண்ணெய் தயாரித்தல், தையல் மற்றும் எம்பிராய்ட்ரி தொழில் போன்ற வாழ்வாதார தொழில் மேம்பாட்டிற்காக பயன்படுத்தி, அதன் மூலம் சுய உதவிக்குழு உறுப்பினர்களாகிய நீங்கள் மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கலாம்.

அதேபோல், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ், 2 பயனாளிகளுக்கு இணை மானிய நிதியின் கீழ், தலா ரூ.4.90 லட்சம் மதிப்பில் கடனுதவிகளும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை, விடியல் பயணம், புதுமை பெண் திட்டம், விதவை ஓய்வூதியம், 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம், பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்களது பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, மகளிர் திட்டம், தாட்கோ, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட தொழில் மையம், மாவட்ட முன்னோடி வங்கி, வாழ்ந்து காட்டுவோம் உள்ளிட்ட அரசுத்துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை அமைச்சர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குநர் காசிநாதன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் (பொ) திலகவதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன், உதகை நகரமன்றத்தலைவர் வாணீஸ்வரி, உதவி திட்ட அலுவலர்கள் அருண்குமார், ஜெயராணி, சாந்தசீலன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர் வசந்த், ஊராட்சி ஒன்றியத்தலைவர் மாயன் (எ) மாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த 766 பயனாளிகளுக்கு ரூ.37.35 கோடியில் கடனுதவிகள் appeared first on Dinakaran.

Tags : Tourism Minister ,Tamil Nadu Women's Development Corporation, Rural Development and Panchayat Department ,Nilgiri district ,Tamil Nadu Women Development ,
× RELATED எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஜூரம்...