×

அரியமான் பீச்சில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்

 

மண்டபம்,செப்.10: உச்சிப்புளி அருகே ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் அரியமான் கடற்கரையில், பாலிதீன் கழிவுகள் தேங்கி சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. அதனை அகற்ற வனச்சரக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் பகுதியில் உச்சிப்புளி அருகே சாத்தக்கோன்வலசை அரியமான் கிராமத்தில் வடக்கு கடலோரப் பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடற்கரை அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு சுற்றுலாப் பயணிகள் கடலில் வாலிபால் விளையாடி நீராடுவது மற்றும் கடலில் படகு சவாரி செய்வது என பறந்த மணலில் அமர்ந்து கடலின் அழகை ரசித்து வந்தனர். அதுபோல கடல் தண்ணீர், மணல் பரப்பு அருகே அமைந்துள்ள ஆயிரக்கணக்கான சவுக்கு மரம் நிழலில் குடும்பத்துடன் அமர்ந்து கொண்டு வந்த உணவுகளை பகிர்ந்து உண்ணுவது, அந்த பகுதியிலேயே சமைத்து உண்ணுவது என பொழுதுகளை போக்கியபடி சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர்.

இதனையடுத்து அரியமான் கடற்கரை பகுதியை சுற்றியுள்ள கிராமத்தில் வசித்து வரும் மீனவர்கள் சுட சுட மீன்களில் மசால் பொருள்கள் சேர்த்து பொறித்து கொடுப்பதால் சுற்றுலாப்பயணிகள் விரும்பி வாங்கி உண்ணுகின்றனர். அதுபோல தனியார் நிறுவனங்கள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நீச்சல் குளம் மற்றும் விளையாட்டு அரங்கங்கள் மற்றும் தங்கும் விடுதிகள்,உணவு விடுதிகள் அமைத்து உள்ளனர்.

இதனால் தமிழகம் முழுவதும் சமூக வலைதளத்தில் அரியமான் கடற்கரை பற்றி பரவலாக தெரியபடுகிறது என்பதால், தினசரி 300க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளும், அதுபோல விடுமுறை நாட்களில் 500 முதல் ஆயிரம் வரை சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
அதுபோல தனியார் நிறுவனங்கள் அமைத்துள்ள தங்கும் விடுதி வளாகத்தில் பிறத்தநாள், மத்திய, மாநில பணிகள் ஓய்வு, திருமணம் விருந்து, அதிகாரிகள் கூட்டம், தனியார் சங்க கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறும். இதனால் அரியமான் கடற்கரை திருவிழா கூட்டம்போல் அவ்வப்போது காணப்படும்.

அரியமான் கடற்கரைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் உணவுகள் மற்றும் தின்பண்டங்கள் அடங்கிய பொருள்களை பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகளில் கொண்டு வருகின்றனர். சுற்றுலாப்பயணிகள் பீச் பகுதியில் அமைந்துள்ள சவுக்கு மரங்களின் நிழல்களிலும், கடலோரப் பகுதியில் மணலிலும் அமர்ந்து உணவு பண்டங்களை பயன்படுத்திய பின்னர் பாலிதீன் கழிவுகளை அப்பகுதியில் விட்டு செல்கின்றனர்.

அதுபோல தனியார் தங்கும் விடுதிகள் பகுதியில் இருந்து பிளாஸ்டிக் கழிவு பொருட்களை சவுக்கு மர பகுதியில் கொட்டி விடுகின்றனர். இந்த பொருள்கள் நாளடைவில் ஒன்று இணைந்து காற்றில் பறந்து சவுக்கு மரங்கள் பகுதி முழுவதும் தேக்கமடைந்துள்ளது. இதனால் கழிவுப் பொருள்களில் பலத்த துர்நாற்றம் உருவாகி வீசுகிறது. மேலும் அந்த பகுதிகளில் சுற்றி திரியும் பசுமாடுகள் மற்றும் ஆடுகள் பசிக்கு உணவு கழிவுகளை பாலிதீன் பைகளோடு சேர்த்து உண்ணுகின்றன.

இதனால் கால்நடைகளுக்கு நாளடைவில் வயிற்றுக்குள் பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கம் அடைந்து உயிரிழப்பும் ஏற்படுகிறது. அதுபோல சுற்றுச்சூழலை பாதிக்கும் விதமாக இந்த பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கி வருகிறது. ஆதலால் சுற்றுச்சூழலை பாதுகாக்க வனச்சரக அதிகாரிகள் அவ்வப்போது பிளாஸ்டிக் கழிவு பொருட்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியமான் கடற்கரை பகுதியில் கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பொதுமக்கள் வளர்த்து வரும் ஆடுகள், பசுமாடுகள் உணவுக்காக அரியமான் கடற்கரைப் பகுதியில் உள்ள சவுக்கு மரங்கள் காட்டுக்குள் வருகிறது.

இந்நிலையில் பீச்சில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா பயணிகள் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தற்காலிக தின்பண்டங்கள்,மீன் பொறியல் உணவு கடைகள் உள்ளது. இந்த கடைகளில் பொருள்களை வாங்குவதற்காக சுற்றுலா பயணிகள் கூடுகின்றனர். அதுபோல சுற்றுலாப் பயணிகளாக வருகை தரும் சிறுமிகள், சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் எந்த நேரமும் அந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பசுமாடுகள் உணவுக்காக போட்டி போட்டு கொண்டு நான்கு திசையிலும் செல்வதற்கு சண்டை போடுகிறது.

இதனால் சுற்றுலா பயணிகள் இந்த மாடுகளுக்கு இடையில் சிக்கி என்ன செய்வது என தெலியாமல் சில நேரம் தவித்து விடுகின்றனர். மாடுகளால் சுற்றுலாப் பயணிகளுக்கு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அரியமான் கடற்கரை பகுதியில் சுற்றித் திரியும் பசுமாடுகளை பாதுகாப்பு கருதி அப்புறப்படுத்த தடவடிக்கை எடுக்க வேண்டும். அரியமான் கடற்கரையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வனத்துறை சார்பில் படகு சவாரி கடலில் இயக்கி வருகின்றனர்.

இந்த படகு சவாரியில் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு கட்டணம் செலுத்தி செல்கின்றனர். இந்நிலையில் கடலோரப் பகுதியில் அருகே தென்னங் கீற்றால் தற்காலிக கூடாரம் அமைத்து சுற்றுலாப் பயணிகள் டிக்கெட் வழங்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கூரை கூடாரம் அவ்வப்போது கடல் காற்றின் தன்மைக்கேற்ப சாய்ந்து விடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்துகளை ஏற்படுத்திட வாய்ப்பு உள்ளது. ஆதலால் கடலோரப் பகுதி அருகே சுற்றுலாப் பயணிகள் படகு சவாரிக்கு செல்வதற்கு கட்டணம் சீட்டு எடுக்கும் நிலையம் மற்றும் காத்திருக்கும் பகுதிக்கும் நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடற்கரை அருகே உள்ள சவுக்கு மரம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளால் விடப்படும் பிளாஸ்டிக் மற்றும் பாலத்தீனில் கொண்டு வரப்படும் கழிவு பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளது. அதில் விஷ கொசுக்கள் போன்ற கிருமிகள் உருவாகி தொற்று நோய் மற்றும் விஷக்காய்ச்சல் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதனால் அப்பகுதிகளில் தேக்கமடையும் குப்பைகளை அகற்றி அவ்வப்போது விஷக்கிருமிகளை அழிக்கும் மருந்துகளை தெளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

The post அரியமான் பீச்சில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Ariyaman Beach ,Mandapam ,Uchipulli ,Dinakaran ,
× RELATED விளையாட்டு திடலை சீரமைக்க வேண்டும் புதுமடம் மக்கள் கோரிக்கை