சென்னை: சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில், தலைமறைவான முக்கிய குற்றவாளி ஒருவர், முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ளதால் இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த குற்றவாளி கைது செய்யப்பட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக துபாய், சார்ஜா, குவைத், அபுதாபி, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் கடத்திக் கொண்டு வரப்பட்ட தங்கங்கள் பெருமளவு, குறிப்பாக கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சுங்கச் சோதனைகள் இல்லாமல் வெளியே கடத்திச் செல்லப்பட்டுள்ளன. இந்த 2 மாதங்களில், ரூ.167 கோடி மதிப்புடைய 267 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளன.
கடத்தல் தங்கம் ஒன்றுக்கு கூட சுங்கச் சோதனை நடத்தப்படவும் இல்லை. பறிமுதல் செய்யப்படவும் இல்லை. அனைத்து தங்கங்களையும் ஒட்டுமொத்தமாக, சோதனைகள் இல்லாமல் கடத்தல் ஆசாமிகள் வெளியில் எடுத்துச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த கடத்தல் சம்பவங்கள் அனைத்திற்கும், சென்னை விமான நிலையத்தில் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்திய யூடியூபர் சபீர் அலியும், அவருடைய கடையில் பணியாற்றும் 7 ஊழியர்களும் உடந்தை எனத் தெரிய வந்தது.
இதில் இலங்கை பயணி உள்பட இந்த 9 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த கடையை சபீர் அலி, வித்வேதா பிஆர்ஜி என்ற தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் இருந்து, சுமார் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செலுத்தி, வாடகைக்கு எடுத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்தைச் சேர்ந்தவரும் பாஜ பிரமுகருமான ஒருவரிடமும், அதேபோல் இந்திய விமான நிலைய ஆணையத்தின் சென்னை விமான நிலைய கமர்சியல் பிரிவு இணை பொது மேலாளர் ஒருவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஆனாலும் இந்த வழக்கில் மேற்கொண்டு யாரும் கைதாகவும் இல்லை. இதுகுறித்து சுங்க அதிகாரிகளும், மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினரும் இணைந்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இதற்கிடையே விசாரணையில், இந்த கடத்தல் சம்பவத்துக்கு தலைவனாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி ஒருவர் தலைமறைவாக இருப்பது தெரிய வந்து அவரை கண்காணிக்கத் தொடங்கினர். மேலும் சபீர்அலி பரிசு பொருட்கள் கடை வாடகைக்கு எடுப்பதற்கு, ரூ. 1 கோடி டெபாசிட் பணம் கட்டியதில் பெரும் பங்கை அந்த கடத்தல் கும்பல் தலைவன்தான் சபீர் அலிக்கு கொடுத்து உதவியுள்ளார் என்றும் தெரிய வந்தது.
இதையடுத்து சுங்க அதிகாரிகள், இந்த வழக்கில் 9 பேர் தவிர, 10வது நபராக அந்த கடத்தல் கும்பல் தலைவனையும் சேர்த்து அவருக்கு 3 முறை சம்மன்கள் அனுப்பினர். ஆனால் அவர் சம்மனை வாங்காமல் திருப்பி அனுப்பியுள்ளார். அதோடு தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக நீதிமன்றம் மூலம் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கலும் செய்தது தெரியவந்தது.
ஆனால் முன்ஜாமீன் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் மற்றொரு மனுவை அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர். அதேநேரத்தில் இந்த கடத்தல் கும்பல் தலைவன் பிடிபட்டால், 267 கிலோ தங்கம் கடத்தல் சம்பவத்தில், மேலும் பல உண்மைகள் வெளிவரும் என்றும், தமிழ்நாடு மட்டுமன்றி வெளிமாநிலங்களை சேர்ந்த சிலரும் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
The post சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ தங்கம் கடத்தலில் திடீர் திருப்பம்: தேடப்படும் குற்றவாளி முன்ஜாமீன் கோரியுள்ளதால் அவரை கைது செய்ய தீவிரம் appeared first on Dinakaran.