வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாசில் இந்தியர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘இந்திய அரசியலில் அன்பு, மரியாதை, பணிவு போன்றவை இல்லாமல் போய்விட்டது’ என்றார். காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அதிகாரப்பூர்வமற்ற பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாசில் நேற்று அவர் அமெரிக்க வாழ் இந்தியர்களை சந்தித்து பேசினார். அப்போது ராகுல் பேசியதாவது: சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தல் முடிவு வெளியான சில நிமிடங்களில், இந்தியாவில் மக்கள் மத்தியில் பாஜ மற்றும் பிரதமர் மோடி மீதான பயம் போய்விட்டதை நாங்கள் பார்த்தோம். எங்கள் அரசியலமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதலை ஏற்கப் போவதில்லை என்பதையும், ஜனநாயகத்தையும் உணர்ந்த இந்திய மக்களின் மகத்தான சாதனை இது. எங்கள் மதத்தின் மீதான தாக்குதலை, மாநிலத்தின் மீதான தாக்குதலை ஏற்க மாட்டோம் என தேர்தல் முடிவு மூலம் மக்கள் உணர்த்தினர். நமது அரசியலமைப்பை தாக்குவது, நமது மதப் பாரம்பரியத்தை தாக்குவதாகும். எனவே இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மோடி தாக்குகிறார் என்பதை கோடிக்கணக்கான மக்கள் தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர்.
சாதி, மொழி, மதம், பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றை பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இடமளிக்கப்பட வேண்டும் என நினைக்கிறோம். ஆனால், இந்தியா என்பது ஒரே கருத்தியலை கொண்டது என ஆர்எஸ்எஸ் நம்புகிறது. இதுதான் பிரச்னை. பாஜவும் ஆர்எஸ்எஸ்சும் பெண்களை கட்டுப்படுத்த வேண்டுமென எண்ணுகின்றன. பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும், அவர்கள் உணவை சமைக்க வேண்டும், அதிகம் பேசக்கூடாது என நினைக்கிறார்கள். ஆனால் நாங்களோ, பெண்கள் என்ன விரும்புகிறார்களோ அதை அவர்கள் செய்யும் சுதந்திரம் இருக்க வேண்டுமென விரும்புகிறோம். இந்திய அரசியலில் அன்பு, மரியாதை, பணிவு ஆகியவை இல்லாமல் போய்விட்டது. குறிப்பிட்ட மதம், சமூகம், சாதி, மாநிலம் அல்லது மொழி பேசுபவர்கள் மீது மட்டும் அன்பு செலுத்த வேண்டிய அவசியமில்லை. அனைத்து மனிதர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும். மிகவும் சக்திவாய்ந்த இந்தியாவை உருவாக்க முயற்சிக்கும் அனைவருக்கும் மரியாதை அளிக்கப்பட வேண்டும். அப்படித்தான் நான் என் சொந்தங்களைப் பார்க்கிறேன். இந்திய நாடாளுமன்றத்தை பொறுத்த வரையிலும் எதிர்க்கட்சிகளின் குரல் தான் மக்களின் குரலாக ஒலிக்கிறது. இவ்வாறு கூறினார்.
The post அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு இந்திய அரசியலில் அன்பு, மரியாதை இல்லை appeared first on Dinakaran.