×
Saravana Stores

இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்க தடை கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: இஸ்ரேல் நாட்டுக்கு இந்தியா ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பாலஸ்தீன மக்கள் மீது போர் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவத்திற்கு இந்திய நிறுவனங்கள் தளவாட பொருட்களை தொடர்ந்து வழங்கி வருவதாகவும், இது சர்வதேச சட்டம் மற்றும் அரசியலமைப்பை மீறக்கூடிய விவகாரம் என தெரிவித்து ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தனர். மேலும் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் தளவாட பொருட்களை வழங்கும் நிறுவனங்களுடைய உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும், புதிய உரிமங்கள் வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து மேற்கண்ட மனுவானது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ‘‘இந்திய நிறுவனங்களால் வழங்கப்படும் தளவாடப் பொருட்கள் இனப்படுகொலைக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஆஜரான ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,’’ இரு நாடுகளுக்கு இடையிலான சர்வதேச நிர்வாகத்திற்கு நீதிமன்றம் தலையிட்டு உத்தரவுகளை பிறப்பிக்க கூடாது. அதற்கான அதிகாரமும் இல்லை என்று தெரிவித்தார். இதையடுத்து வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘‘தளவாடப் பொருள்களை இஸ்ரேலுக்கு இந்திய நிறுவனங்கள் வழங்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஏதேனும் விதிமுறைகளை விதித்தால், அது இந்திய வெளியுறவுக் கொள்கையில் தலையிடுவதற்கு சமம் ஆகும். எனவே நீதிமன்றத்தால் வெளியுறவு கொள்கைகளில் தலையிட முடியாது’’ எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

The post இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்க தடை கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Israel ,Supreme Court ,NEW DELHI ,INDIA ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறை என்பது நீதிமன்ற பகுதி...