×

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு வழிபாடு

வேளாங்கண்ணி: கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் பசலிக்கா அந்தஸ்து பெற்றது. இந்த பேராலயத்தில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழா 24ம் இரவு 11 மணிக்கு திருப்பலியுடன் தொடங்கி கொண்டாடப்பட்டது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய வளாகத்தில் உள்ள சேவியர் திடலில் கிருஸ்துமஸ் பண்டிகை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து மறையுரை, கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், கொங்கனி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் கிருஸ்துமஸ் திருப்பலிகளை நிறைவேற்றினார். பங்குத்தந்தை அற்புதராஜ் மற்றும் உதவிப் பங்குத் தந்தைகள் பூஜைகளை நடத்தினார்கள். திருப்பலிகளின் நிறைவில் இயேசு பிறப்பை அறிவிக்கும் வகையில் பேராலய அதிபர் இருதயராஜ் குழந்தை இயேசு சொருபத்தை பக்தர்களுக்குக் காண்பித்தார். அப்போது பக்தர்கள் அனைவரும் மண்டியிட்டு இயேசு துதி வாசகங்களை ஜெபித்து வழிபட்டனர். பேராலய நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு வாழ்த்துச் செய்தி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பக்தர்கள் கிருஸ்துமஸ் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். கிருஸ்துமஸ் பண்டிகையையட்டி பேராலய கோபுரங்கள் மட்டுமின்றி வேளாங்கண்ணி நகரமே மின்னொளி பந்தலில் ஜொலித்து  விழாக்கோலம் பூண்டிருந்தது. கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கடந்த சில ஆண்டுகளாக பேராலய விண்மீன் ஆலயத்தில் கிருஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும், ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் சேவியர் திடலில் வழிபாடுகள் நடத்தப்பட்டது. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டுள்ளது. …

The post கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Velankanni ,St. Arogya Mata Paralaya ,Christmas ,Velankanni Holy Arogya Mata Paralaya ,
× RELATED வேளாங்கண்ணி – எழும்பூர் ரயில் புறப்படும் நேரம் மாற்றியமைப்பு!!