×
Saravana Stores

உங்க லிகமென்ட் பேசுகிறேன்!

 

நன்றி குங்குமம் டாக்டர்

சமீப காலங்களில் நாம் அதிகம் கேட்கும் ஒரு மருத்துவ வாக்கியமாக, ‘லிகமென்ட் இஞ்சூரி ஆய்டுச்சு… அதனால பிசியோதெரபி பண்ண சொல்றாங்க’ என்பதைச் சொல்லலாம். இந்நிலையில் ‘லிகமென்ட் (தசைநார்) என்றால் என்ன? என்பது தொடங்கி, இதன் முக்கியத்துவம் யாது, இதற்கும் இயன்முறை மருத்துவத்திற்கும் என்ன தொடர்பு என்பது வரைக்குமான பலவற்றையும் இங்கே விரிவாக அறிந்து கொள்ளலாம்.

தசைநார்கள்

இரண்டு எலும்புகள் இணைந்து மூட்டு உருவாகும். இதனை உறுதியாக இணைத்து வைத்திருப்பதே இந்த தசைநார்கள்தான். மூட்டுகள் இருப்பதால்தான் குனிவது, நிமிர்வது, மடக்குவது, நீட்டுவது என அனைத்து வேலைகளையும் நம்மால் செய்ய முடிகிறது. மூட்டுகளைச் சுற்றி மெல்லிசாக பட்டையான வடிவில் அமைந்திருக்கும் இந்த தசைநார், ஒவ்வொரு இடத்திற்கு ஏற்றவாறு வடிவமும் நீளமும் மாறுபட்டிருக்கும். இதனையே நாம் ‘சவ்வு’ என்கிறோம்.

900-க்கும் அதிகமான சவ்வுகள் நம் உடம்பில் இருக்கிறது.

தசைநாரின் வேலைகள்…

* இரு எலும்புகள் இணைத்து மூட்டுகளை உருவாக்கும் பாலமாக இருக்கிறது.

*தசைநார் இறுக எலும்புகளை பிடித்திருப்பதால் மூட்டு அமைப்பு சிதையாமல் உறுதியாக இருக்கும்.

* மூட்டுகள் இப்படி உறுதியாக இருப்பதால் நாம் செய்ய வேண்டிய அசைவுகளை பாதிப்பு இல்லாமல் செய்யலாம். அதாவது, மூட்டுகள் பிழற்வதை தடுக்கலாம்.

எந்த இடத்தில்…

கால் முட்டி சவ்வு, கணுக்கால் சவ்வு இவை இரண்டிலுமே அதிக நபர்களுக்கு காயம் ஏற்படும் என்பதால், எப்போதும் முதல் இடத்தை வகிக்கிறது. மற்ற மூட்டு சவ்வுகள் காயமாவது குறைவே.

காயத்திற்கான காரணங்கள்…

* சிறு மற்றும் பெரிய அளவிலான விபத்துகள்.

*மாடிப்படிகளில் கால் தவறி விழும்போது.

*விளையாட்டு வீரர்களுக்கு விளையாடும் நுணுக்கத்தில் திடீரென அடிக்கடி திரும்பும் போது.

*உடற்பயிற்சிக் கூடங்களில் அதிக எடையை சரியாக கையாளாமல் தவறாக உடற்பயிற்சிகள் செய்வது.

வருமுன் தடுப்போம்…

*விளையாட்டு வீரராய் இருந்தால் தினசரி உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

*வார இறுதியில் விளையாடுபவராய் இருந்தால் முறையான உடற்பயிற்சிகள் இயன்முறை மருத்துவரிடம் பயின்று அதனை குறைந்தது வாரத்தில் 5 நாட்களாவது செய்து வருவது அவசியம்.

*அனைத்து வகை தொழிலில் இருப்பவரும் உடற்பயிற்சி செய்வதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்.

*சுண்ணாம்புச் சத்து, போதுமான நீர் அருந்துவது, வைட்டமின் டி மட்டுமல்லாமல் அனைத்து வகை சத்துக்களும் எடுத்துக் கொள்ளுதல் அவசியம்.

மருத்துவம்…

ஜவ்வு கிழிவதால் ஏற்படும் வலிக்கு மருந்து மாத்திரைகளை எலும்பு மூட்டு மருத்துவர் வழங்குவார். ஆனால் அதில் முழு தீர்வு இல்லை. மேலும், அதனால் உடல் உபாதைகள் (அதாவது, பக்க
விளைவுகள்) வரலாம் என்பதால், அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுகி தக்க தீர்வுகள் காணலாம்.

கிழிதலின் அளவை பொறுத்து உடற்பயிற்சியின் அளவு, வகை, எண்ணிக்கை என எல்லாம் மாறுபடும். உடற்பயிற்சிகள் செய்வதனால் தசைகளுக்கு வலிமை அதிகமாகும். இதனால் நம் மூட்டிற்கு ஸ்திரத்தன்மை தசைகள் வழியே கிடைக்கும். எனவே ஜவ்வுகளுக்கு எடையைக் கடத்தாமல் குணமடைய செய்ய முடியும். வலி இருந்தால் அதனை குறைக்க இயன்முறை மருத்துவ உபகரணங்களும் பயன்படுத்துவர்.

ஜவ்வுகள் முற்றிலும் கூடிய பிறகு வேறு சில பயிற்சிகள் வாழ்நாள் முழுவதும் செய்ய கற்றுக் கொடுப்பர். இதனை செய்து வருவதால் மீண்டும் ஜவ்வு கிழியாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
புள்ளிவிவரம்…

* உடலில் அதிகமாக கிழியக்கூடியது கால் முட்டி ஜவ்வுகள்தான்.
* சராசரியாக 3 ஆயிரத்தில் ஒருவர் இந்த வகை சவ்வினால் பாதிக்கப்படுகிறார்.
* முதலில் விளையாட்டு வீரர்களும், இரண்டாவது வார இறுதியில் விளையாடும் ஆண்களும், மூன்றாவதாக விபத்துகளில் சிக்குபவர்களும்.
* பெண் விளையாட்டு வீரர்களைக் காட்டிலும் இரு மடங்கு ஆண் வீரர்களுக்கே பாதிப்பு இருக்கிறது.

ஜவ்வு கிழிதலுக்கான படிநிலைகள்…

முதல் நிலை: கண்ணுக்குத் தெரியாத நம்மால் உணர முடியாத மெல்லிய பாதிப்பு இருக்கும்.இரண்டாவது நிலை: சவ்வு பாதி கிழிந்த நிலை. வலியும் வீக்கமும் குறைவான அளவில் இருக்கும். பாதிக்கப்பட்ட மூட்டில் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருப்பதை அவ்வப்போது உணரலாம்.மூன்றாவது நிலை: முழுவதுமாக கிழிந்த நிலை. வலியும் வீக்கமும்
தொடர்ச்சியாக இருக்கும். மூட்டில் ஸ்திரத்தன்மை முற்றிலும் இருக்கலாம்.முதல் இரண்டு படிகளில் ஒன்றரை மாதத்தில் ஜவ்வு ஆறிவிடும். மூன்றாம் படியில் மூன்று முதல் ஆறு மாதமாவது ஆகும்.

அறிகுறிகள்…

* விழும்போது ‘கிளிக்’ என சத்தம் சம்பந்தப்பட்ட மூட்டுகளில் வரும்.

* வலி, வீக்கம், சிவந்து போதல் இருக்கலாம்.

* நடக்கும்போது ஸ்திரத்தன்மை மூட்டில் இல்லாமல் இருப்பதை உணர முடியும். உதாரணமாக, கால் முட்டியில் மூன்றாம் படி பாதிப்பு இருக்கும்போது, நடக்கும் போது நம்மை அறியாமல் ஒரு வினாடி கால் மடங்கும். இதுமாதிரி அடிக்கடி நிகழலாம்.

விளைவுகள்…

* முதல் இரு படிநிலைகளை முறையாக கவனித்து மருத்துவம் பார்க்கவில்லையெனில், இன்னும் அதிகமாக சவ்வு கிழிய வாய்ப்புகள் அதிகம்.

* மூன்றாம் படிநிலை இருந்தும் மருத்துவம் எடுத்துக் கொள்ளவில்லை எனில், வலி வீக்கம் அதிகமாகும். நாம் ஸ்திரத்தன்மை இல்லாமல் மீண்டும் விழவும் நேரிடும்.

* உரிய சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளவில்லையெனில், விளையாட்டு வீரர்களுக்கு விளையாடுவதில் சிரமம் ஏற்படும்.

* மற்றவர்களுக்கு படிகள் ஏறுவது, வாகனம் ஓட்டுவது என சிறிய விஷயங்களில் கூட சிரமம் ஏற்படும்.

அதிக பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள்…

* விளையாட்டு வீரர்கள்.

* உடற்பயிற்சி செவ்வனே செய்யாத விளையாட்டு வீரர்கள்.

* வார இறுதிகளில் மட்டுமே விளையாடுபவர்கள்.

* ஏற்கெனவே ஜவ்வு கிழிந்திருந்தால் அதனை முற்றிலும் சரி செய்யாமல் மீண்டும் விளையாடுபவர்கள்.

* விளையாட்டு நுணுக்கங்களை சரியாக புரிந்துகொள்ளாமல் விளையாடுபவர். உதாரணமாக, கிரிக்கெட்டில் பந்தை அடிப்பவராய் (Batsman) இருந்தால், அவர் பந்தினை அணுகும் விதம், எத்தனை முறை, எந்தப் பக்கம் திரும்புகிறார், திரும்பும் போது கால்களை எப்படி வைத்திருக்கிறார் என பல விஷயங்கள் உள்ளன.

கண்டறிவது எப்படி…

விழுந்தவுடன் சத்தம் கேட்டாலோ, மூட்டுகளில் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருப்பதை நாம் உணர்ந்தாலோ எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துப் பார்க்க மருத்துவர்களும், இயன்முறை மருத்துவரும் பரிந்துரைப்பர்.இது மட்டுமில்லாமல் பாதிக்கப்பட்ட மூட்டினை அசைத்துப் பார்த்து ஸ்திரத்தன்மை இல்லாமல் இருப்பதை இயன்முறை மருத்துவர்கள் கண்டறிவர்.

அறுவை சிகிச்சை…

முற்றிலும் கிழிந்த ஜவ்வு சிலநேரம் அடிபட்ட வேகத்தில் சிறு எலும்புத் துகள்களை பிரித்துக்கொண்டு வந்துவிடும்.அப்படி இருக்கும் சூழலில் அறுவை சிகிச்சை அவசியம் தேவைப்படுகிறது.விளையாட்டு வீரர்களுக்கு கூட முற்றிலும் ஜவ்வு கிழிந்து இருந்தாலும் இயன்முறை மருத்துவரின் உடற்பயிற்சிகளே போதுமானது. ஆனால், திரும்பத் திரும்ப ஜவ்வு கிழியும் போது அறுவை சிகிச்சை செய்து கொள்வது நல்லது.

அறுவை சிகிச்சை முடிந்த பின்னும் மீண்டும் எழுந்து நடக்க, நம் வேலைகளை இயல்பாகச் செய்ய, விளையாட்டு வீரர் விளையாட்டினை மீண்டும் தொடர உடற்பயிற்சிகள் அவசியம். பெரும்பான்மையான மக்கள் அறுவை சிகிச்சை முடிந்தால் எல்லாம் சரியாகிவிட்டது என எண்ணுவர். ஆனால், அதற்குப் பிறகும் இயன்முறை மருத்துவம்தான் முக்கியம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

தொகுப்பு: கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

 

The post உங்க லிகமென்ட் பேசுகிறேன்! appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kumkum ,Dinakaran ,
× RELATED எலும்பு வலிமை இழப்பு காரணமும் தீர்வும்!