×
Saravana Stores

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 4 சென்னை இளைஞர்களின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு: ஒருவரின் சடலத்தை தேடும் பணி தீவிரம்

தஞ்சை: தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய சென்னையை சேர்ந்த 5 வாலிபர்களில் 4 பேரின் சடலம் மீட்கப்பட்டது. மேலும் ஒருவரின் சடலத்தை தேடும் பணி நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா கோயில் திருவிழாவில் நேற்று இரவு தேர் பவனி நடைபெற்றது. இந்த திருவிழாவை காண சென்னை எழும்பூர் நேருபார்க் ஹவுசிங் போர்டில் குடியிருந்து வரும் சார்லஸ் மகன்கள் பிராங்கிளின்(23), ஆண்டோ(20) மற்றும் அவரது நண்பர்கள் கிஷோர்(20), கலையரசன்(20) மனோகரன்(19) உள்பட 17 பேர் சுற்றுலா பஸ்சில் வேளாங்கண்ணிக்கு வந்தனர்.

பின்னர் நேற்று காலை 7 மணிக்கு பூண்டி மாதா கோயிலுக்கு வந்துள்ளனர். அவர்கள் கொள்ளிடம் ஆறு அருகில் சமையல் செய்தனர். அப்போது அதில் பிராங்கிளின் உள்பட 5 பேரும் அங்குள்ள சந்தன மாதா ஆலயம் அருகே கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 5 பேரும்தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதியினர் 5 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் நீரில் மூழ்கி இறந்த கலையரசன், கிஷோரை சடலங்களாக மீட்டனர்.

தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஆற்றில் மூழ்கிய மேலும் 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மனோகர் உடலும் மீட்கப்பட்டது. பின்னர் இருட்டானதால் பிராங்கிளின், ஆண்டோ உடல்களை தேடும் பணி தடைபட்டது. இந்நிலையில் 2வது நாளாக இன்று இருவரது உடல்களையும் போலீசார் தேடினர். இதில் பிராங்கிளின் உடல் மீட்கப்பட்டது.

தகவலறிந்த இறந்தவர்களின் உறவினர்கள் சென்னையிலிருந்து புறப்பட்டு நேற்றிரவு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு உடல்கள் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்கள் ஒப்படைக்கப்படுகிறது. பலியான 5 பேரும் சென்னையில் புதிதாக துவக்கப்பட்டுள்ள கம்பெனியில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 4 சென்னை இளைஞர்களின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு: ஒருவரின் சடலத்தை தேடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kollidam River ,Tanjore ,Chennai ,Poondi Mata temple festival ,Tirukkatupalli, Tanjore district ,
× RELATED பழையாறு மீன்பிடி துறைமுகத்தில்...